×

பொதுசேவை வாகனங்களில் இருப்பிடம் கண்டறியும் கருவி

சென்னை: பொது சேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவிகள் மற்றும் பானிக் பட்டனைப் பொருத்த  வேண்டும் என போக்குவரத்துத்துறை கமிஷனர் தென்காசி ஜவஹர் உத்தரவிட்டுள்ளார். தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் ஜவஹர், அனைத்து  போக்குவரத்து மண்டல அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய சாலைப் போக்குவரத்து  அமைச்சகத்தின் உத்தரவின்படி, அனைத்து பொது சேவை வாகனங்களிலும் அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவி மற்றும் ஒன்று அல்லது  அதற்கு மேற்பட்ட பானிக் பட்டனைப் பொருத்த வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு கடிதங்களும் அனுப்பப்பட்டது.  

இந்த உத்தரவில், இரு சக்கர வாகனம், மின்சார ரிக்‌ஷா, மூன்று சக்கர வாகனம் உள்ளிட்டவற்றுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி குறித்த  விவரம், சான்று, பரிசோதனை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன்படி குறிப்பிட்ட நிறுவனங்களின்  வாகனங்களின் இருப்பிடத்தைக் கண்டறியும்  கருவி மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளதாக பரிசோதனை முகமை  நிறுவனங்களின் சான்றைப் பெற்றுள்ளது. எனவே அனைத்துப் போக்குவரத்து வாகனங்களிலும் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவி  பொருத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்வதுடன், அந்தக் கருவியின் உண்மைத் தன்மையை உற்பத்தியாளர்களின் இணையதளம் வாயிலாக தெரிந்து  கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Location detection tool in public service vehicles
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...