×

கடந்த நான்கு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள 478 உதவி செயற்பொறியாளர் காலி பணியிடங்களால் கூடுதல் பணிச்சுமை: வடகிழக்கு பருவமழை பணிகளை கண்காணிப்பதில் சிக்கல்

சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளாக 478 உதவி செயற்பொறியாளர்  பணியிடங்கள் காலியாக உள்ளதால் பொறியாளர்கள் கூடுதல் பணிச்சுமையால்  தவித்து வருகின்றனர். தமிழக பொதுப்பணித்துறையில் பணிகளை கண்காணிக்க முதன்மை தலைமை பொறியாளர்களின் கீழ் தலைமை பொறியாளர்,  கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி  வருகின்றனர். இதில், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர்கள் தான் களத்தில் இறங்கி பணியாற்றுகின்றனர். இந்த  நிலையில், பதவி உயர்வு, ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் இப்பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் காலியாகி வருகிறது.  குறிப்பாக, உதவி  பொறியாளர் 650 பணியிடங்களும், உதவி செயற்பொறியாளர் 478 பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த நிலையில் உதவி பொறியாளர் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி மூலம் புதிதாக 410 உதவி பொறியாளர்கள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 750 உதவி செயற்பொறியாளர் பணியிடங்களில் 478 பணியிடங்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக  உள்ளது.இந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியான உதவி பொறியாளர் பட்டியல் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதில் குளறுபடி இருப்பதாக கூறி ஒரு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த  வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது. இதை காரணம் காட்டி சட்டத்துறை, பொதுத்துறை அதிகாரிகள் உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு  பட்டியலுக்கு ஒப்புதல் வழங்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.

இதனால், தற்போது வரை 478 உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதன்காரணமாக, ஒரு உதவி செயற்பொறியாளர் 4 முதல்  5 பணியிடங்களை கூடுதலாக கவனித்து வருகின்றனர். இதே போன்று 15 கண்காணிப்பு பொறியாளர், 20 செயற்பொறியாளர் பணியிடங்களும் காலியாக  உள்ளது. இதன் காரணமாக, கடந்த பட்ஜெட்டில் அறிவித்த பணிகளை கண்காணிக்கவும், அந்த பணிகளுக்கான திட்ட அறிக்கை தயார் செய்யவும்  உதவி செயற்பொறியாளர்கள் இல்லாத நிலையில் பெரும்பாலான திட்டப்பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. அதே போன்று தற்போது  வடகிழக்கு பருவமழை முன்ெனச்சரிக்ைக, புதிய மருத்துவக்கல்லூரி கட்டுமான  பணிகளை கண்காணிப்பது, பல்வேறு திட்டப்பணிகளுக்கு அறிக்கை  தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இப்பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதே போன்று நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏரிகள் புனரமைப்பு பணி, தடுப்பணை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் திட்ட அறிக்கை தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இப்பணிகளை தொடங்க முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.



Tags : Northeast , Additional workload due to 478 Assistant Engineer vacancies not filled in last four years: Trouble monitoring Northeast monsoon work
× RELATED திருவொற்றியூர் திமுக கூட்டத்தில்...