×

நடராஜன் என் ஹீரோ...கபில்தேவ் பாராட்டு

ஐபிஎல் தொடரில் அசத்திய யார்க்கர் மன்னன்  நடராஜன் தங்கராசை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். பாராட்டு மழையில்  நனைந்த வண்ணம் உள்ள நடராஜன் இந்திய அணியிலும் இடம் பிடித்து அசத்தியுள்ளார். சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ‘ஐபிஎல் 13வது  சீசனின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு நடராஜன்’ என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில்  காணொளி மூலம்  பேசிய கபில்தேவ் கூறியதாவது: இப்போது உள்ள வேகப் பந்துவீச்சாளர்களை கண்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. பந்தை  ஸ்விங் செய்யத் தெரியாமல், வேகமாகப் பந்து வீசுவதால் பலன் இல்லை. கூடவே மற்ற  நுட்பங்களை கற்றுக்கொள்வதாலும் எந்த பயனும் இல்லை.  நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்  நடராஜன் தான் என் ஹீரோ. அந்த இளம் வீரர் எந்த பயமுமின்றி  பந்துவீசினார்.

அதிலும்  யார்க்கர் பந்துகளை நிறைய வீசினார். அதனால்தான் சொல்கிறேன், இன்று நாளை என்றில்லை, இன்னும்  100 ஆண்டுகள்  ஆனாலும்  யார்க்கர்தான் சிறந்த பந்து. காலம் மாறிப் போச்சு: இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தனது மனைவியின் முதல் பிரசவத்திற்காக விடுப்பு  எடுத்துள்ளார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட்களில் அவர் விளையாட மாட்டார் என்கிறார்கள். சுற்றுப்பயணத்தில்  இருந்ததால் கவாஸ்கர் தனது மகனை பல மாதங்கள் பார்க்காமல் இருந்தார். ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. கோஹ்லி தனது தந்தை  இறந்த மறுநாளே  கிரிக்கெட் விளையாட வந்து விட்டார். ஆனால் இப்போது தன் குழந்தை பிறக்கும்போது உடன் இருக்க வேண்டும் என்று  நினைக்கிறார்.

அதை தவறு என்று சொல்ல முடியாது. நீங்கள் ஒரு விமானத்தை வாங்கிக் கொண்டு 3 நாட்களில் இங்கு வந்துச் செல்ல முடியும். அந்தளவுக்கு  இன்று வீரர்கள் வசதியாக இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும்  இருக்கிறது. கோஹ்லி விஷயத்தில் எனக்கு மகிழ்ச்சிதான்.  அவரது ஆர்வத்தை புரிந்துக் கொள்கிறேன். இவ்வாறு கபில் தெரிவித்துள்ளார். கோஹ்லி விடுமுறை குறித்து கவாஸ்கர் கூறுகையில், ‘ஒரு  உண்மையை பார்க்க வேண்டும். கோஹ்லி இல்லாத எல்லா நேரங்களிலும் இந்திய அணி வென்று இருக்கிறது.  தர்மசாலாவில் நடந்த ஆஸ்திரேலியா,  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள், 2018 ஆசிய கோப்பை, நிடஹாஸ் கோப்பை  என பல உதாரணங்களை சொல்ல முடியும்.

அவர் இல்லாததை இந்திய வீரர்கள் உணர்ந்து செயல்படுவார்கள்’ என்றார். அதே போல் சில நாட்களுக்கு முன்பு எம்.எஸ்.தோனி மனைவி சாக்‌ஷி,  ‘எனக்கு குழந்தை பிறகும்போது, அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : Natarajan ,Kapil Dev , Natarajan is my hero ... Kapil Dev praise
× RELATED சேலத்தில் 22 ஆண்டுக்கு முன் நடந்த கொடூர...