உதயநிதி கைது பாரபட்சமானது; சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்: டிஜிபிக்கு டி.ஆர்.பாலு எம்பி கடிதம்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் கைது பாரபட்சமானது. எனவே, இந்த விஷயத்தில் சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என டிஜிபிக்கு அளித்துள்ள கடிதத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழக டிஜிபிக்கு அளித்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 20ம் தேதி நாகப்பட்டினத்தில் ‘விடுதலை நோக்கி’ பிரச்சாரத்தை ஆரம்பித்த உடனேயே கைது செய்யப்பட்டார். இது மிகவும் பாரபட்சமானது. திமுகவை அடக்குவதற்கு போலீஸ் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

முதல்வர், அமைச்சர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கோவிட்-19க்கு நிர்ணயம் செய்யப்பட்ட விதிமுறைகளை மீறினாலும், அரசியல் கூட்டங்கள், நிகழ்வுகளை எவ்வித தடையும் இன்றி உரையாற்ற சுதந்திரமாக அனுமதிக்கப்படுகிறார்கள். சட்டத்திற்கு முன் சமத்துவம் என்பது நமது அரசியலமைப்பின் தொடுகல்லாக இருப்பதால் சட்டம் அனைவருக்கும் சமமாகவும், ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும். எனவே மாநில காவல்துறை தலைவராக, உங்கள் துறை ஒரு பக்கச்சார்ப்பற்ற மற்றும் தன்னிச்சையான முறையில் செயல்படாது என்பதை உறுதிப்படுத்த உங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது.

எனவே, கோவிட்-19 விதிமுறைகளை கடைபிடித்து தேர்தல் பிரச்சாரம், கூட்டம் நடத்தும் திமுக உறுப்பினர்களை தடுப்பதை கைவிட வேண்டும். திமுகவுக்கான பிரச்சாரம் செய்யும் உதயநிதி ஸ்டாலினை தடுக்கும் பராபட்சமான நடைமுறைகளை நிறுத்துங்கள். முதல்வர், அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் மற்ற உறுப்பினர்களுக்கும் செய்யப்பட்டுள்ளபடி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பாகுபாடற்ற நடைமுயை பின்பற்றுங்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>