×

10 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் எழும்பூர்-சென்ட்ரல் ரயில் நிலைய இணைப்பு ரயில் பாதை திட்டம்

* பங்கீட்டு நிதி, நிலம் வழங்குவதில் தமிழக அரசு தாமதம்
* போக்குவரத்து நெரிசல் குறையும்
*பயணிகளுக்கு அலைச்சல் இருக்காது

சென்னை: ரயில்வே நிர்வாகம் கோரும் அளவுக்கு நிலத்தை வழங்கவும்,  பங்கீட்டு நிதியை அளிக்கவும் தமிழக அரசு முன் வராததால் எழும்பூர்-சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இணைப்பு பாதை திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து டெல்லி, மும்ைப, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கேரளா, பீகார், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஜார்கண்ட போன்ற பகுதிகளுக்கு தினமும் 56க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் கோவை, ஈரோடு, மதுரை என தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இந்த ரயில்களில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

எழும்பூர் ரயில் நிலையம்: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில், செங்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு தினமும் 56க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் தினமும் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை பயணிகள் பயணம் செய்கின்றனர்.

எழும்பூர்-சென்ட்ரல் இணைப்பு
சென்னை எழும்பூர்-சென்ட்ரல் இடையே கடந்த 2010ம் ஆண்டு ₹90.44 கோடி செலவில் இணைப்பு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு தேவையான நிலத்தை மாநில அரசு ஒதுக்கித்தரும் எனவும், மாநில அரசு தனது பங்கீட்டு நிதியை வழங்கும் எனவும் ரயில்வே அமைச்சகம் எதிர்பார்த்தது. ஆனால், தமிழக அரசு உரிய நிலத்தை வழங்குதல் மற்றும் தனது பங்கீட்டு நிதி உதவிகளை செய்ய தாமதப்படுத்தியதால், வேறு வழியின்றி 10 ஆண்டுகளாக ரயில்வே அமைச்சகம் இத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது.

இதனால் முதியோர், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் 500 மீட்டர் தூரம் நடந்து சென்று ரயில்களை பிடிக்க வேண்டி உள்ளது. இதற்காக லக்கேஜ்வுடன் படிக்கெட்டுகளில் ஏற முடியாமலும், அவற்றை தூக்கி செல்ல முடியாமலும் அவர்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து, ரயில்வே சங்க நிர்வாகிகள் கூறியதாவது: எழும்பூர்- சென்ட்ரல் இணைப்பு ரயில் பாதை இடையே பூந்தமல்லி நெடுஞ்சாலை குறுக்கிட்டதால் இப்பாதையில் பஸ் போக்குவரத்திற்கு மேம்பாலம் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் கீழ் பகுதியில் ரயில் பாதை அமைக்கப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 11வது பிளாட்பாரத்துடன் இணைப்பதற்கு திட்டம் இருந்தது. ஆனால், மாநில அரசு நிலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கவில்லை. அப்போது மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் குறிப்பிட்ட பகுதி இத்திட்டத்தில் ரயில்வேக்கு தேவைப்பட்டது.

மேலும் இந்த இடமும் அரசு பொது மருத்துவமனை விரிவாக்கத்திற்கு கொடுக்கப்பட்டு விட்டது. இதனால், எழும்பூர் - சென்ட்ரல் இணைப்பு ரயில் பாதை திட்டம் இனி நிறைவேற்றப்படுவது சிரமம் என்பதால் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது, இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்துவது என்பது சிரமமான காரியம். தற்போது அங்கு மெட்ரோ ரயில்கள் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. எனவே இனிமேல் எழும்பூர்- சென்ட்ரல் இணைப்பு பாதை என்பது நிறைவேற்ற முடியாத திட்டமாகி விட்டது என்றனர்.

கடற்கரை மின்சார ரயில் நிலையம்
சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு தினமும் 150க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களை தினமும் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மின்சார ரயிலில் எழும்பூர் வரும் பயணிகள், வட மாநிலங்களுக்கு செல்ல, அங்கிருந்து பஸ், ஆட்டோ, கால்டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் லக்கேஜ்,  அதிக பணம், காலவிரையம், மனஉளைச்சல், டென்ஷன் போன்றவற்றை சந்தித்தே சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல முடியும். எனவே, எழும்பூர்  ரயில்நிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு செல்லும்  வகையில் நேரடி இணைப்பு பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும்  ரயில் பயணிகள் தொடர்ந்து தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைத்தனர்.

வயோதிகர்கள், நோயாளிகள் அவதி
எழும்பூரிலிருந்து புறநகர் மின்சார ரயில் மூலம் பூங்கா அல்லது பூங்கா நகர் ரயில் நிலையம் வரை எளிதாக செல்லலாம். ஆனால் அதன் பிறகு சுரங்கபாதைய வழியாக தான் செல்ல முடியும். குடும்பத்துடன் செல்பவர்கள் மற்றும் வயதானவர்கள் பார்க்கில் இருந்து சென்ட்ரல் நிலையம் செல்வது கடினமானது. ரயில் தவற விடுதல், நடக்க முடியாமை, வயோதிகர்கள், நோயாளிகள் காரணமாக 500 மீட்டக்கும் மேல் சுமைகளுடன் நடப்பது கடினமான ஒன்று.

புறநகர் சேவை
சென்ட்ரல் மூர்மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் நான்கு திசைகளிலும் இயக்கப்படுகிறது. இதனால் சென்னை புறநகர் மட்டுமின்றி  திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திர  மாநிலத்துக்கும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் சென்னை, திருவள்ளூர்,  ராணிப்பேட்டை, ஆந்திர எல்லையோர மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தினசரி அரசு, தனியார் மற்றும் வியாபாரம், தினக்கூலி போன்ற வேலைகளுக்கு சுமார் 5 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

* சென்னையின் அடையாளமாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது.
* 1856ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் ராயபுரத்தில் முதல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.
* 2வது ரயில் நிலையம் பார்க் டவுனில் அமைக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர் ஹென்றி இர்வின்.
* தற்போதைய சென்ட்ரல் ரயில் நிலையத்தை 2 லட்சம் பேர் தினசரி பயன்படுத்துகின்றனர்.
* சென்ட்ரல் புறநகர் மின்சார ரயிலில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஆந்திராவின் எல்லை மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சம் பயணிகள் தினசரி பயன்படுத்துகின்றனர்.
* புறநகர் ரயிலில் குறைந்த கட்டணம் மற்றும் அதிகளவு ரயில் சேவை காரணமாக கூலி தொழிலாளி முதல் ஐடி, தலைமை செயலக அதிகாரிகள் வரை பயன்பெறுகின்றனர்.
* எழும்பூர் ரயில் நிலையம் 1908 வரை கோட்டையாக இருந்தது. அதில் வெடிபொருள் சேமிக்கப்பட்டது. அதன் பெயர் எழும்பூர் ெரடோ.

* ரயில் நிலைய கட்டிடம் மட்டும் 2.5 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.
* இதற்காக 1.7 ஏக்கர் நிலம் அப்போதே ரூ1 லட்சத்துக்கு தனியாரிடம் இருந்து ரயில்வே வாங்கியது.
* கட்டிடத்தை வடிவமைத்தது ஆங்கிலேயர் ராபர்ட் சிஸ்ஹோம். இது 1905ல் தொடங்கப்பட்டு 1908ல் கட்டி ஜூன் 11ம் தேதி திறக்கப்பட்டது. இதை கட்டியவர் பெங்களூருவை சேர்ந்த சாமிநாத பிள்ளை.
* 1905ல் எழும்பூர் ரயில் நிலையம் கட்ட 17 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
* முதலில் ராபர்ட் கிளைவ் பெயர் சூட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு ெசய்தது. ஆனால் அப்போதே அந்த கொடுங்கோலரின் பெயரை சூட்டக் கூடாது என்று தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எழும்பூர் ரயில் நிலையம் எனப் பெயரிடப்பட்டது.
* ஆரம்பத்தில் ஜெனரேட்டர் பயன்பாட்டில் எழும்பூர் ரயில் நிலையம் செயல்பட்டது.


Tags : Egmore , Egmore-Central Railway Station Link Rail Project, which has been paralyzed for 10 years
× RELATED சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!