×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் புஷ்பயாகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் நேற்று புஷ்பயாகம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 15ம் நூற்றாண்டு முதல் நடந்து வந்த புஷ்பயாகம் காலப்போக்கில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 1980ம் ஆண்டு முதல் புஷ்ப யாகம் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு வருடத்தில் வருகிற கார்த்திகை மாத சிராவண நட்சத்திரத்தில் புஷ்பயாகம் ஆண்டுதோறும் நடக்கிறது.
அதன்படி, நேற்று பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்திலிருந்து பல வண்ண மலர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு ஊர்வலமாக தோட்டத்துறை இயக்குநர் சீனிவாசலு தலைமையில் கொண்டு வரப்பட்டது.

கோயில் முன்பு  செயல் அலுவலர் ஜவகரிடம் வழங்கப்பட்டது. பின்னர், கோயிலில் உள்ள சம்பங்கி மண்டபம் என்று அழைக்கப்படும் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் முன்னிலையில் பால், தயிர், இளநீர், சந்தனத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வேத பண்டிதர்கள் சதுர்வேத பாராயணம் படித்தனர். சர்வ பூபால வாகனத்தில் கொலு வைக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு சாமந்தி, மல்லி, முல்லை, தாழம்பூ மற்றும் ரோஜா உள்ளிட்ட 14 வகையான மலர்கள் மற்றும் துளசி, மருவம் வில்வம் போன்ற இலைகளால் புஷ்பயாகம் நடந்தது.

கோயில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.  புஷ்பயாகத்தையொட்டி, கோயிலில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், டோல் (ஊஞ்சல்) உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதில், கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத், துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Sridevi ,Bhudevi Sametha Malayappa Swami ,Tirupati Ezhumalayan Temple , 7 tons of flowers for Sridevi, Bhudevi Sameda Malayappa Swami at Tirupati Ezhumalayan Temple
× RELATED நடிகை சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல்...