திருவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 வாலிபர்களும் சடலமாக மீட்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 3 வாலிபர்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். இவர்கள் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை கொட்டுகிறது. திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கனமழையால், மலையடிவாரத்திலுள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.

மேலும், பேச்சியம்மன் கோயில் ஓடை, பேயனாற்று ஓடைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம், அத்திதுண்டு பகுதியில் பேமலையான் கோயில் அருகே ஓடையில் நேற்றுமுன்தினம் குளிக்கச்சென்ற கோட்டைப்பட்டி பகுதியை சேர்ந்த பால்பாண்டி (22), கோபி (22), முத்துஈஸ்வரன் (21) ஆகிய மூவரும், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.

மூவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுகாலை பால்பாண்டி மற்றும் முத்துஈஸ்வரன் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். அந்த இடத்தை சுற்றி தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்றது. 3 மணிநேர தேடுதலுக்கு பின் கோபியும் சடலமாக மீட்கப்பட்டார்.காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்த மூவரின் உடல்களையும் மீட்ட மம்சாபுரம் போலீசார், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்த 3 பேரின் குடும்பத்திற்கும், அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோட்டைப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோபியை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

Related Stories:

>