பழனி முருகன் கோயிலில் இருந்து வெளியேறும் கழிவுகளால் விளைநிலங்கள் பாதிப்பு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல்

பழனி தண்டாயுதபாணி திரு கோயிலில் இருந்து வெளியேறும் கழிவுகளால் விளைநிலங்கள் மாசடைந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக 2012 -ம் ஆண்டு பேருந்து நிறுத்தம் மற்றும் தங்கும் விடுதி கட்டப்பட்டது.

தங்கும் விடுதியில் இருந்து தங்கள் விளைநிலத்தில் கழிவுநீர் வெளியேற்ற படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ரவிச்சந்திரன், விஜயலட்சுமி, ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரிக்க  பழனி சார் ஆட்சியர், நகராட்சி ஆணையர், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆகியோரை கொண்ட குழுவை அமைத்த தீர்ப்பாயம் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து விளைநிலங்களை நேரில் ஆய்வு செய்த நிபுணர் குழு தீர்ப்பாயத்தில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்ததுள்ளது.

அதில் பேருந்து நிறுத்தம் மற்றும் தங்கும் விடுதியில் 36 கழிப்பறைகள், 28 குளியலறைகள் உள்ளதாகவும் சுற்றுசுவரில் துளையிட்டு மனுதாரரின் விளைநிலங்களில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுதாரரின் விளைநிலங்களில் இருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளைநிலத்தில் கழிவுநீரை வெளியேற்றி சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்கான இழப்பீட்டை கணக்கிட கூடுதல் கால அவகாசம் தேவை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையை பரிசீலித்த தென்மண்டல தீர்ப்பாயம் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம் வழங்கி விசாரணையை ஜனவரி 22க்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories:

>