×

கொரோனா இரண்டாவது அலை: குஜராத், மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்

அகமதாபாத்: கொரோனா இரண்டாவது அலையை தடுக்கக் குஜராத்தின் அகமதாபாத்தில் 57 மணி நேர முழு ஊரடங்கும், மத்தியப் பிரதேசத்தின் 5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கக் குஜராத்தில் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் இரவு ஒன்பது மணி முதல் காலை 6 மணி வரையான இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர அகமதாபாத்தில் வெள்ளி இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை 57 மணி நேர முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் பள்ளி கல்லூரிகள் நவம்பர் 23 முதல் திறக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்த உத்தரவைக் கல்வித்துறை திரும்பப் பெற்றுள்ளது.

முழு ஊரடங்கு உத்தரவால் அகமதாபாத்தின் அனைத்துச் சாலைகளிலும் காவல்துறையினர் சோதனைச் சாவடி அமைத்து இன்றியமையா சேவை வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அரியானாவில் நவம்பர் 30 வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என மாநிலக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் போபால், இந்தூர், குவாலியர், ரத்லம், விதிசா ஆகிய 5 மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான காலவரையற்ற ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலகங்கள், இன்றியமையாச் சேவைப் பணிகள் ஆகியவற்றுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் டிசம்பர் 31 வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona Second Wave: Curfew Again ,Gujarat ,Madhya Pradesh , Corona
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...