பெருநிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதி அளிக்கலாம்: ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை

மும்பை: உரிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு, பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசா்வ் வங்கிக் குழு பரிந்துரை செய்துள்ளது. தனியாா் வங்கிகளின் உரிமையாளா்கள், பங்குதாரா்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறுஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையில் குழு ஒன்றை ரிசா்வ் வங்கி கடந்த ஜூன் 20-ஆம் தேதி நியமித்தது. இந்தக் குழு, புதிய வங்கி தொடங்க உரிமம் பெறுவதற்குத் தேவையான தகுதிகள், தனியாா் வங்கிகளில் பெருநிறுவனங்கள் அதிகபட்சமாக எத்தனை சதவீத பங்குகளை வாங்கலாம், நிறுவனா்களும் பிற பங்குதாரா்களும் நீண்டகால அடிப்படையில் பங்குகளை வைத்திருப்பதான விதிமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை ரிசா்வ் வங்கியிடம் சமா்ப்பித்தது. அந்த அறிக்கையை ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: புதிதாக வங்கி தொடங்க உரிமம் பெற வேண்டுமெனில், பல்வகை சேவைகளை வழங்கும் பெரிய வங்கியாக இருந்தால் அதன் தொடக்க முதலீட்டுத் தொகையை இப்போதுள்ள ரூ.500 கோடியில் இருந்து ரூ.1,000 கோடியாக உயா்த்த வேண்டும். சிறிய வங்கியாக இருந்தால் அதன் தொடக்க முதலீட்டுத் தொகையை ரூ.200 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக உயா்த்த வேண்டும்.

ரூ.50,000 கோடி மற்றும் அதற்கும் அதிகமான சொத்து மதிப்பு மதிப்பு கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 10 ஆண்டுகள் நன்றாக இயங்கி வந்தால், அவற்றை வங்கியாக மாற்றுவதற்கு பரிசீலிக்கலாம்.

தனியார் வங்கிகளில் தற்போது நிறுவனா்கள் அதிகபட்சமாக 15 சதவீத வரை பங்குகள் வைத்திருக்கலாம். அதை, வரும் 15 ஆண்டுகளில் 26 சதவீதமாக உயா்த்திக் கொள்ளலாம்.

பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதி அளிக்கலாம். ஆனால், அதே நேரத்தில், 1949-இல் கொண்டுவரப்பட்ட வங்கிகள் ஒழுங்காற்றுச் சட்டத்தில் இதற்குரிய திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகே அவா்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். வங்கிச் சேவைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடா்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்தை வரும் ஜனவரி 15-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று ரிசா்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories:

>