×

பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை மும்பை தாக்குதல் நினைவு தினத்தில் நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டம்?

புதுடெல்லி: மும்பை தாக்குதலின் நினைவாக, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்த இருந்த மிகப் பெரிய தாக்குதலை முறியடித்து, பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் நக்ரோடா பகுதியில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சம்பா பகுதியில் இருந்து வந்த லாரியை பான் சுங்க சாவடி அருகே சோதனையிட முயன்றனர். அப்போது, லாரியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். ராணுவத்தினரும் உடனடியாக, லாரியை சுற்றி வளைத்து பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் 4 மணி நேரம் நடந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மும்பை தாக்குதல் நினைவு தினமான வரும் 26ம் தேதி மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர், நுண்ணறிவு பிரிவு உயரதிகாரிகள் பங்கேற்றனர். இதில் ஜம்மு காஷ்மீரில் மேலும் பாதுகாப்பை பலப்படுத்துவது, தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். அதன் பின்பு பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ``பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வந்திருக்க கூடும். ஆனால் அவர்களின் இந்த முயற்சியை நமது வீரர்கள் முறியடித்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். தங்களது வீரத்தையும், வலிமையையும் அவர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்,’’ என கூறியுள்ளார்.



Tags : Emergency consultation ,Modi Terrorists ,Mumbai , Emergency consultation led by Prime Minister Modi Terrorists plan to sabotage Mumbai attack memorial day?
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!