×

லடாக்கில் கவனத்தை திசை திருப்பி இந்திய எல்லை முழுவதிலும் ரகசியமாக படைகளை குவிக்கும் சீனா

புதுடெல்லி: லடாக்கின் மீது இந்தியாவின் கவனத்தை திசை திருப்பி விட்டு, கிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் ரகசியமாக தனது படை, ஆயுத பலத்தை சீனா குவித்து வருகிறது. இதன் உச்ச கட்டமாக, உத்தரகாண்ட் அருகே துன்ஜன் லா பகுதியில் கண்டெய்னர் வடிவிலான புதிய வீடுகளை சீனா அமைத்துள்ளது.கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இது தொடர்பாக, இரு தரப்பிலும் இதுவரை 7 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், சுமூகமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இந்தியாவின் கவனத்தை லடாக் எல்லை பிரச்னையில் திசை திருப்பி விட்டு, கிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் ரகசியமாக தனது படை, ஆயுத பலத்தை சீனா குவித்து வருகிறது. தரையில் இருந்து வான்வழி தாக்கும் ஏவுகணைகள், எண்ணிலடங்கா ஆளில்லா வாகனங்களை நிறுத்தி உள்ளதுடன், திபெத்தில் உள்ள அதன் விமானப்படை தளத்தையும் விரிவுப்படுத்தி உள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள கவுரிக் கணவாயில் இருந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பிஷ் டெய்ல் I மற்றும் II வரையிலான பகுதியில் சீனா ஆக்கிரமித்து வருவது இந்திய ராணுவ அதிகாரிகளை கவலை அடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக, கவுரிக் கணவாய் அருகே சுரூப் கிராமத்தில் சாலை அமைக்கும் உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக, இமாச்சல், உத்தரகாண்ட் இடையே உள்ள பாரஹோடி அருகே துன்ஜன் லா பகுதியில் கண்டெய்னர் வடிவிலான புதிய வீடுகளை சீனா கட்டி உள்ளது. அதே போல, டெம்சோக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 82 கி.மீ. தொலைவில், கர் கான்சா விமான தளத்துடன் அமைந்துள்ள ஷிகுவான்கே முகாமை, கனரக தளவாடங்கள், படை வீரர்களை டெம்சோக்கில் இருந்து பாரஹோடி கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாக சீனா பயன்படுத்தி வருகிறது.சிக்கிம், அருணாச்சல், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கை குறி வைத்து, யேபி மலைப்பகுதியில் உள்ள பும் லாவில் கண்காணிப்பு பகுதியில் சீனா மீண்டும் தனது படைகளை குவித்து வருகிறது. சிக்கிமின் வட பகுதியில் உள்ள செபு லா அருகே சாங்முவில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியின் போது இந்தியா தரப்பில் இது கண்டறியப்பட்டது.

இதே போன்று, அக்சாய் சின் பகுதிக்குட்பட்ட கஷ்கார் விமான தளத்திலும் சீனா தனது ஆயுதங்களை குவிக்கிறது. சிக்கிம் எல்லைக்கு எதிரே உள்ள ஷிகாட்சே விமான தளத்தில் ஏராளமான ஆளில்லா போர் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரம், கசா விமானத் தளத்திலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிழக்கு லடாக் பிரச்னை தீவிரமடையும் நிலையில், மற்ற எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படைகளைக் கொண்டு சீனா தனது தாக்குதலைத் தொடங்க தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவும் இரு தரப்பு ராணுவ பேச்சுவார்த்தையின் மூலம் எடுக்கப்பட்டு வரும் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

தகவல் பெறுவதை தடுக்க ஜாமர்கள்
கிழக்கு பகுதியை பொருத்தவரை, அருணாச்சல் எல்லையில், கடந்த 1962ல் சீனா தனது போர் முகாமாக பயன்படுத்திய நியாங்லு பகுதியில் மின்னணு போர் தளவாடங்களை சீனா நிறுவி உள்ளது. அது மட்டுமின்றி, இந்தியாவின் வர்த்தகம், தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் இங்கிருந்து தகவல்கள் பெறுவதை தடுக்கும் வகையில் ஜாமர்கள் பொருத்தி உள்ளது.



Tags : China ,border ,Indian ,Ladakh , Distracted in Ladakh across the Indian border China secretly concentrating forces
× RELATED எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக...