×

மீண்டும் தன்ராஜ் பிள்ளை முன்னாள் வீரர்களின் ஆட்டம் ஆரம்பம்

புதுடெல்லி: தன்ராஜ் பிள்ளை உள்ளிட்ட ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னாள் ஹாக்கி வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளை நடத்த ஹாக்கி இந்தியா திட்டமிட்டுள்ளது. முன்னாள் ஹாக்கி வீரர்களுக்காக சர்வதேச சங்கமான   ‘வேர்ல்ட் மாஸ்டர்ஸ் ஹாக்கி’ அமைப்புடன்     இந்திய ஹாக்கி சங்கமான ‘ஹாக்கி இந்தியா’  இணைந்தது. மார்ச் மாதம் இந்த இணைப்பு நடந்தாலும், கொரோனா பீதி காரணமாக சங்கங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில் சில நாட்களுக்கு மூன்பு சங்க வேலைகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. முன்னாள் கேப்டன் ஹர்பிந்தர் சிங் தலைமையில் ‘ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கமிட்டி’ அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில்  முன்னாள் வீரர்கள் ஆர்.பி.சிங்,  பி.பி.கோவிந்தா,  ஜக்பிர்சிங், ஏ.பி.சுப்பையா முன்னாள் வீராங்கனைகள் சுரீந்தர் கவுர், ரேணுகா லட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இப்போது புதிதாக முன்னாள் கேப்டன் பர்கத் சிங், முன்னாள் வீரர்கள் மிர் ரஞ்சன் நேகி, குர்பக்ஸ் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக மாநில சங்கங்களின் மூலமாக முன்னாள் வீரர்கள்  பதிவு செய்யும்படி இந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி  ஒலிம்பிக், சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர், வீராங்கனைகள் இப்படி பதிவு செய்யலாம். அப்படி இணையும் முன்னாள் வீரர்களை கொண்டு தேசிய, சர்வதேச அளவில் போட்டிகளை  நடத்த ஹாக்கி இந்திய திட்டமிட்டுள்ளது. அதனால் முன்னாள்  ஹாக்கி நட்சத்திரங்கள் தன்ராஜ் பிள்ளை,  ஜக்பிர் சிங், திலீப் டிர்கி ஆகியோரின் ஆட்டத்தை ரசிகர்கள் மீண்டும் கண்டு களிக்க வாய்ப்பு கிடைக்கும். இது குறித்து ஹாக்கி இந்திய பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங்,‘இந்த முயற்சியின் மூலம், முன்னாள் வீரர்களை மீண்டும் விளையாட வைப்பதுடன், அவர்கள் மிகவும் நேசிக்கும் ஹாக்கியுடனான தொடர்பை தொடர வைப்பதுதான்’ என்று கூறினார்.

தன்ராஜ் தான் கேப்டன்
இந்த முயற்சியால் உற்சாகமான மூத்த வீரர்கள் பலரும், சமூக ஊடகங்களில் உற்சாகமாக விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.  திலீப் டிர்கி, ‘தன்ராஜ்தான்  அணியை வழிநடத்த வேண்டும்’ என்று சொல்ல, தன்ராஜ் பிள்ளையோ, ‘சீனியரான பர்கத் சிங் அணியில் இருந்தால் நான் எப்படி வழி நடத்த முடியும். நான் எனது  மூத்தவர்களை மதிக்க ேவண்டும்’ என்று கூறியுள்ளார்.

அரசியல் கூடாது
ஒலிம்பிக்கில் கடைசியாக தங்கப்பதக்கம் வென்ற ஹாக்கி அணியின் கேப்டனும், சென்னை ஹாக்கி சங்கத்தின் தலைவருமான வி.பாஸ்கரன், ‘இது நல்ல முயற்சி. பழைய நண்பர்களை பார்க்கவும், மீண்டும் விளையாடவும் வாய்ப்பு கிடைப்பது நல்ல விஷயம். ஏற்கனவே பல்வேறு கிளப்களில் முன்னாள் வீரர்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே இந்த புதிய முயற்சிகளால் அந்த  கிளப்கள் பாதிக்கக்கூடாது. அவர்களுக்கும் அங்கீகாரம் அளிக்க ேவண்டும். கிளப் அளவிலான போட்டிகளை ஊக்குவிக்க ேவண்டும்.

முன்னாள் வீரர்களுக்கு, அவர்களின் போட்டிகளுக்கு வெளிநாடுகளில் அரசும், பெரு நிறுவனங்களும் ஆதரவு தருகின்றனர். அதே போன்று இங்கும் அரசுகளும், நிறுவனங்களும் முன்னாள் வீரர்கள் போட்டியில் பங்கேற்க உதவி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மூத்த வீரர்கள் நிதி நிலைமைகளை கருத்தில் கொண்டு முன் முயற்சிகளை தொடங்க வேண்டும். அதில் அரசியல் இருக்கக்கூடாது’ என்று கூறினார்.



Tags : Tanraj Pillai ,game , Again Tanraj Pillai The beginning of the game of former players
× RELATED ரம்மி விளையாட்டில் ரூ.30 ஆயிரம் இழப்பு போலீஸ்காரர் தற்கொலை