×

தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு தேங்காயுடன் கடத்த முயற்சி 10 கோடி செம்மரம் லாரியுடன் பறிமுதல்: ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து தேங்காயுடன் கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் லாரியுடன் பிடிபட்டன. தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டிற்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி பின்புறம் உள்ள கன்டெய்னர் முனையத்திலும் சோதனை நடத்தினர். அங்கு வந்த 40 அடி கன்டெய்னர் குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த கன்டெய்னருக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தேங்காய்கள் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இருப்பினும் அதிகாரிகள், கன்டெய்னரை திறந்து சோதனையிட்டனர்.

அப்போது கன்டெய்னரின் முன்பகுதியில் தேங்காய்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததுடன் பின்பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கன்டெய்னர் லாரியையும், அதிலிருந்த 16 மெட்ரிக் டன் எடையுள்ள செம்மரங்களையும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 கோடி ஆகும். இந்த செம்மரங்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய் துறைமுகமான ஜபல்அலிக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனிடையே கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடி விட்டார். இதைத் தொடர்ந்து ஆவணங்களை சமர்பித்தவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளரை தேடி வருகின்றனர்.




Tags : Dubai ,Thoothukudi , Attempt to smuggle 10 crore sheep from Thoothukudi to Dubai confiscated with lorry: One arrested
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...