சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் உள்ளாடையில் மறைத்து கடத்திய 3.26 கோடி தங்கம் பறிமுதல்

கோவை: சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை மத்திய வருவாய் இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்தனர்.  மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனை செய்து அனுப்பினர். அப்போது சிலரது நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவர்கள் கொண்டு வந்த பேக்குகள் மற்றும் லக்கேஜ்கள், உடைமைகள் ஆகியவற்றில் ஏதேனும் மறைத்து கொண்டு வந்துள்ளனரா? என சோதனை செய்தனர்.  அப்போது அவர்களின் உள்ளாடைகளில் பேஸ்ட் போல் ஒட்டி 5 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் மற்றும் 1 கிலோ தங்க செயின் ஆகியவற்றை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களது லக்கேஜ்களில்  6 லட்சம் எண்ணிக்கையிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ.3.26 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் ரூ 1.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள், ரூ.53 லட்சம் மதிப்பிலான டிரோன் கேமராக்கள் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை (ஐபோன்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கேரள மாநிலம் காசர்கோடு, திருச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த சையத் அஜ்மீர் காஜா, ரசித், முகமத் சகிர், ஜலானி, முகமத் சமீம், சையத் முகமது,  முஹம்மத் அப்துல் காதிர், மன்சூர் அலி, ஹாசில் பயாஸ், சையத் முஹம்மத், அப்துல் ஹக்கீம், சுகைல் அப்துல் மஜீத், குன்னில் பாப்பு, அகமத் தன்சீர், குன்னில் மஸ்ஜித் ஆகிய 15 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் 25 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், கமிஷனுக்காக சார்ஜாவில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>