‘அரோகரா கோஷங்கள் முழங்க’ திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்: அனுமதி இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம்

உடன்குடி:அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கடந்த 15ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டி திருவிழாவில் விரதம் மேற்கொள்வதற்காக கோயில் வளாகம், பிரகார மண்டபம், தனியார் விடுதிகளில் தங்கியிருப்பர். இந்தாண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு மாலையில் ஜெயந்திநாதர், அம்பாளுடன் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தை வந்து சேர்ந்தார். மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சியும் துவங்கியது. முன்னதாக சூரபத்மன் சிவன் கோயிலிலிருந்து கடற்கரைக்கு படை பரிவாரங்களுடன் வந்தார்.

இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக கோயில் கடற்கரை முகப்பு பகுதியில் சூரசம்ஹாரம் நடந்தது. மாலை 4.49 மணிக்கு கஜமுகசூரனை ஜெயந்திநாதர் வதம் செய்தார். தொடர்ந்து 4.56மணிக்கு சிங்கமுக சூரனையும், 5.04மணிக்கு சூரபத்மனையும் வதம் செய்தார். பின்னர் சேவலும் மாமரமாக மாறிய சூரனை சுவாமி ஆட்கொண்டார். பின்னர் ஜெயந்திநாதர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். வீடுகளில் விரதமிருந்த பக்தர்கள் சம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவு செய்தனர். நிகழ்ச்சியை யாரும் காண முடியாதபடி கடற்கரை தகரத்தால் மறைக்கப்பட்டிருந்தது.

Related Stories:

>