அரியர் தேர்வு வழக்கை கவனிக்க வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் மாணவர்கள் நுழைந்ததால் இடையூறு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை பாதிப்பு

சென்னை: அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை கவனிக்க நூற்றுக்கணக்கானவர்கள் வீடியோ கான்பரன்சிங்கில் நுழைந்ததால் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை பாதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, நேற்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு, நேற்று 26வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.  இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆன்லைன் விசாரணையில் லாக் இன் செய்தனர். மொத்தம் 350 பேர் வரை லாக்இன் செய்திருந்தனர். நீதிமன்றத்திற்குள் நுழைந்தவுடன் அமைதி காக்க வேண்டும், செல்போன்களை மியூட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்காததால், நீதிமன்ற நடைமுறையின்போது வீடுகளில் தொலைக்காட்சி ஒலி, குழந்தைகள் சப்தம் உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட்டன.  

இதனால் வழக்குகள் விசாரணையை நீதிபதிகள் நிறுத்தி விட்டனர். வழக்குகள் விசாரணை தடைபட்டதால், தேவையில்லாமல் லாக் இன் செய்தவர்களை வெளியேறும்படி, சம்பந்தப்பட்ட வக்கீல்கள் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் எவரும் வெளியேறவில்லை. இதனால் நீதிமன்ற பணிகளிலும் இடையூறு ஏற்பட்டது. கடந்த விசாரணைகளின் போதும் ஏராளமான மாணவர்கள், விசாரணையில் பங்கேற்று, இடையூறு ஏற்படுத்தினர். அப்போது, மாணவர்கள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>