மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை இபிஎஸ், ஓபிஎஸ் அவசர ஆலோசனை: வழிகாட்டு குழுவின் அதிகாரம் அதிரடி பறிப்பு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிற்பகல் சென்னை வரும் நிலையில், அதிமுக மூத்த தலைவர்களுடன் இபிஎஸ், ஒபிஎஸ் ஆகியோர் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் வழிகாட்டு குழுவின் அதிகாரம் அதிரடியாக பறிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். 61,843 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டம், சென்னை வர்த்தக மையம் 309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். பின்னர் இரவில் பாஜ மூத்த தலைவர்களுடன் தனியாக ஆலோசனை நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் சில விஐபிக்களை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பாஜ போட்டியிட விரும்பும் 60 தொகுதிகளின் பட்டியலை கொடுப்பார் என்றும், அதில் இருந்து 50 தொகுதிகளில் பாஜ போட்டியிட தொகுதி ஒதுக்கும்படி கேட்டுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.  இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 20 பெண் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதில் அதிமுக ஆதரவு வாக்குகளை சேர்ப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து விவாதம் எழுந்துள்ளது. அப்போது, வழிகாட்டு குழுதான் வேட்பாளர்களை தேர்வு செய்யும் என்று கூறப்பட்டது. அவ்வாறு செய்தால், கோஷ்டி பூசல் ஏற்படும். இதனால் மூத்த தலைவர்கள் அமர்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று சில தலைவர்கள் வலியுறுத்தினர்.

 வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் வலியுறுத்தி வந்தார். இதனால்தான் அந்தக்குழு அமைக்கப்பட்டது. தற்போது அந்தக்குழுவுக்கு அதிகாரம் இல்லாமல் செய்தால், அவரது ஆதரவாளர்கள் பிரச்னை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வழிகாட்டு குழுவுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் கிடையாது. மூத்த தலைவர்கள் அமர்ந்து முடிவு செய்வார்கள் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனால் வழிகாட்டு குழுவின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கூட்டணியையும் மூத்த தலைவர்களே முடிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாஜ கூட்டணி குறித்து கூட்டத்தில் யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. இதனால் கூட்டம் அமைதியாக முடிந்தது.

Related Stories:

>