×

துணைவேந்தர் சூரப்பா மீது அடுக்கடுக்காக குவியும் புகார்: நீதிபதி கலையரசன் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிந்து வருவதாக நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்த நிலையில், தமிழக அரசு சூரப்பா மீதான புகார்களை விசாரிப்பதற்கான விசாரணை குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த 11ம் தேதி அமைத்தது. மேலும் மூன்று மாதங்களுக்குள் சூரப்பா மீதான புகார்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி கலையரசன் துணைவேந்தர் சூரப்பா மீது ஆதாரங்களுடன் புகார் தரலாம். புகார் தருபவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து,  நேற்று முன்தினம் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் மோசடி புகார் ஒன்று கூறப்பட்டுள்ளது. நிதி அலுவலர்கள், கணக்கு தணிக்கையாளர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்படும். அவருடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என தெரிவித்தார். மேலும், சூரப்பா மீது குற்றம்சாட்டி புகார் கொடுத்தவர்களையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தவுள்ளதாக கூறினார்.

இதை தொடர்ந்து துணைவேந்தர் சூரப்பா மீது தொலைபேசி மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் ஏராளமான புகார்கள் வந்தபடி இருந்தன. பல்கலைக்கழக ஊழியர்களும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சூரப்பா மீது புகார் கூறுபவர்கள் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்க வேண்டும். எழுத்துப்பூர்வ புகார்கள் கிடைத்தப்பிறகு விசாரணை தொடங்கும் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.



Tags : Surappa ,Judge , Accumulated complaint against Vice Chancellor Surappa: Judge Kalaiyarasan Information
× RELATED தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு...