×

நடிகர்கள், அரசியல்வாதிகள் மருத்துவ படிப்பில் சேரும் ஏழை மாணவர்களை தத்தெடுத்து கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் : உயர்நீதிமன்றம் அறிவுரை!!

மதுரை : மருத்துவ படிப்பில் சேரும் ஏழை மாணவர்களுக்கு பிரபலங்கள் உதவ முன்வர வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.முதன்முறையாக தமிழக அரசின் முயற்சியால் அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் ஒதுக்கீடு சட்டம் மூலமாக மருத்துவ படிப்பில் சேரவிருக்கின்றனர். 7.5% உள் ஒதுக்கீட்டின் படி 313 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றனர்.தகுதி பெற்ற 313 மாணவர்களில் 227 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது.எஞ்சிய 86 பேருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர தனியார் மருத்துவ கல்விக் கட்டணத்தை குறைத்து நிர்ணயிக்கக் கோரி கிரஹாம்பெல் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுப் பள்ளி மாணவர்கள் 86 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அத்துடன் பொருளாதார சூழலால் மருத்துவ படிப்பைப் பாதியிலேயே மாணவர்கள் கைவிடுவது வேதனை மிகுந்தது என்பதை குறிப்பிட்ட நீதிபதிகள், ஏழ்மை நிலையில் மருத்துவ படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிரபலங்கள் உதவ முன்வர வேண்டும் என்றும் நடிகர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் மாணவரை தத்தெடுத்து கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் 86 பேருக்கும் அரசே கட்டண செலவை ஏன் ஏற்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணம் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது. இதனை கேட்ட நீதிபதிகள் சுயநிதி கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதார செயலர், மருத்துவக்கல்வி இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : politicians ,Actors ,High Court , Actors, politicians, medical students
× RELATED ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்