குழந்தைகளுக்கு கிடைப்பதில் தாமதமாகும்... 2024ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி :சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

புதுடெல்லி, :வரும் 2024ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் என்று, சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். ஆனால், குழந்தைகளுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்றார். கொரோனா தடுப்பூசி கண்டறியும் விஷயத்தில் இந்தியாவின் சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியோர் ஒருங்கிணைந்து தடுப்பூசி உருவாக்கி வருகின்றனர். இதுதொடர்பாக நடந்த கருத்தரங்கில் சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி பூனாவாலா பேசியதாவது:

கொரோனா தடுப்பூசி முதலில் சுகாதார ஊழியர்களுக்கும், வயதானவர்களுக்கு வழங்கப்படும். மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் பிறகு, சாதாரண மக்களுக்கும் கிடைக்கும். அதன்பின் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.  கொரோனாவின் தாக்கம் குழந்தைகளிடம் குறைவாக உள்ளது. இது ஒருவகையில் நமக்கு நிம்மதி அளிக்கிறது. தற்போது தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.  இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. தடுப்பூசி வழங்கப்பட்ட நபர்களுக்கு லேசான காய்ச்சல், தலைவலி மற்றும்  உடல் பலவீனம் போன்ற புகார்கள் வந்துள்ளன. அதற்கு பாராசிட்டமால்  உட்கொள்வதன் மூலம் குணமாக்கி கொள்ள முடியும். எனவே தடுப்பூசி பாதுகாப்பு குறித்து  கவலைப்பட தேவையில்லை.

இருப்பினும், அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும். ஆனால், நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி சென்றடைய இன்னும் நான்கு ஆண்டுகள் (2024) ஆகும். தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்வதில் பட்ஜெட், தடுப்பூசிகள், பராமரிப்பு வசதிகள், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி விநியோகம் ஆகிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும், 10 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன்-ஜூலை மாதத்திற்குள், 300-40 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வோம்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி ஃபைசர் மற்றும் மதர்னாவை விட ஐந்து முதல் ஆறு மடங்கு மலிவாக இருக்கும். இது ரூ.500 முதல் ரூ.600க்கு சந்தைகளில் கிடைக்கும். மத்திய அரசு மொத்தமாக வாங்கிக் கொண்டால், ஒரு டோஸுக்கு மூன்று முதல் நான்கு டாலர்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>