×

பஸ்வான் மறைவால் டிச. 14ல் இடைத்தேர்தல்:ஒரு ‘சீட்’டையும் இழக்கும் லோக் ஜனசக்தி : பீகாரில் கூட்டணி முறிவால் பின்னடைவு

புதுடெல்லி, :ராம் விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான எம்பி பதவிக்கான இடைத்தேர்தல் வரும் டிச. 14ல் நடக்கிறது. லோக் ஜனசக்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதால் இருந்த ஒரு சீட்டையும் இழக்கும் நிலையை சந்தித்துள்ளது. பீகாரின் லோக் ஜனசக்தி தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மாதம் 8ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவர் பீகாரில் இருந்து கடந்த ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம், 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைய இருந்தது. இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியாக உள்ள அந்த மாநிலங்களவை இடத்துக்கு வரும் டிச. 14ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 26ம் தேதி தொடங்குகிறது.

உறுப்பினர் தேர்வுக்கான போட்டி இருக்கும்பட்சத்தில், டிச. 14ம் தேதி  தேர்தல் நடந்து அன்று மாலையே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தலால், பஸ்வான் மகனான சிராக் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியிடம் இருந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பும் பறிபோக வாய்ப்புள்ளது. இக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில்  இருந்து விலகி பீகார் தேர்தலை சந்தித்தால், காலியாக உள்ள மாநிலங்களவை  உறுப்பினர் இடத்தை ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கைப்பற்றும் என்று  தகவல்கள் கூறுகின்றன.

லோக் ஜனசக்தி கட்சிக்கு மக்களவையில் 4  உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இன்றைய நிலையில் ஒரு இடம் கூட இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பீகார் தேர்தலில் வெற்றிப் பெற்ற புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை மறுநாள் (நவ. 22) பதவியேற்க உள்ளனர். சட்டமன்ற சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட அவதேஷ் நாராயண் சிங், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



Tags : Lok Sabha ,Janashakthi ,Coalition ,Bihar , Baswan, Lok Janashakthi, Pikadi, Coalition
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...