திருமயத்தில் காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா நிகழ்ச்சி

திருமயம்: திருமயத்தில், பொன்னமராவதி உட்கோட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் தேங்கி உள்ள மனுக்களை விசாரித்து சுமூகமான முறையில் தீர்வு காணும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமலக் கண்ணன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பொன்னமராவதி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் தேங்கி உள்ள மனுக்கள், குடும்ப பிரச்சனை காரணமாக வழக்கு பதிவு செய்ய முடியாத புகார்கள் மற்றும் சிவில் சம்பந்தப்பட்ட புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்களுக்குள் பிரச்சனை உருவாகிவிடும் என்ற நோக்கிலும் நீதிமன்றத்திற்கு சென்றால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட புகார்தார்களை வரவழைத்து அவர்களிடம் சுமூகமாக பேசி சமாதான உடன்படிக்கை ஏற்படும் வகையில் பெட்டிஷன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசாரிக்கப்பட்ட 48 மனுக்களில் 34 மனுக்களுக்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது.

Related Stories: