திருவில்லிபுத்தூரில் 2 இடங்களில் சாலையை சீரமைக்கக்கோரி நூதன போராட்டம்

திருவில்லிபுத்தூர்: மோசமான சாலையை சீரமைக்க கோரி திருவில்லிபுத்தூர் அருகே நேற்று 2 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தானிலிருந்து நாகபாளையம் விலக்கு வரை வரை உள்ள சாலைகள் மிகவும் மோசமாக நிலையில் உள்ளன. பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இவற்றை சீரமைக்க அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அச்சம்தவிர்த்தான் பகுதியிலுள்ள நரியன்குளத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சுகந்தி உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் ராமகிருஷ்ணாபுரம் புதூர் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். இதில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இரண்டு இடங்களிலும் நடைபெற்ற போராட்டத்தல் பெண்கள் குலவையிட்டு நாற்று நட்டனர். சாலையை சீரமைக்கக்கோரி நடைபெற்ற இந்த நூதனப்போராட்டம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

Related Stories:

>