உயிர் பலியை தடுக்க கூழாங்கல் ஆற்றில் பாறை குழியை மூடும் பணி

வால்பாறை: வால்பாறை கூழாங்கல் ஆற்றில் உயிர் பலி ஏற்படுத்திவந்த பாறை குழியை ராட்சத கற்கள் கொண்டு நிரப்பும் பணி நேற்று துவங்கியது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்வார்கள். இந்த ஆற்றின் மற்றொரு பகுதியில் பாறை குழி உள்ளதால் அங்கு குளிக்க அனுமதி இல்லை. அதற்கான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் இளைஞர்கள் விதிமீறி குளிக்கின்றனர். அவ்வாறு குளிக்கும் போது, பாறை குழியில் சிக்கி மனிதர்கள் உயிரிழப்பது அதிகரித்து வந்ததால் இந்த பாறை குழியை மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ராட்சத கற்கள் கொண்டு இந்த பாறை குழியை மூடும் பணி தொடங்கியது. இப்பணியை வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுண்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், இப்பகுதியில் குளித்தபோது 10க்கும் மேற்பட்டவர்கள் பாறை குழி நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். இதனால் இந்த பாறை குழியை மூட மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், அமைச்சர் உத்தரவின்படி பாறை குழியை மூடும் நடவடிக்கை துவங்கி உள்ளது, என்றார்.

அவருடன் வால்பாறை தாசில்தார் ராஜா, இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். வால்பாறை நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு வால்பாறை பகுதி வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Related Stories:

>