×

இணையதள சேவை பாதிப்பால் இ பதிவு கிடைக்காமல் நாடுகாணி செக்போஸ்டில் அணி வகுத்து நின்ற வாகனங்களால் நெரிசல்

கூடலூர்: கொரோனா பரவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்குள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் நுழைய ஏற்கனவே இ பாஸ் அனுமதி பெற்று வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு கடந்த சில வாரங்களாக மாற்றப்பட்டு இ பதிவு செய்து மாவட்டத்துக்குள் வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருவோர் இ பதிவு செய்து எல்லைகளில் அவற்றை காட்டி வந்து சென்றனர்.

இதேபோல், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து இரு மாநிலங்களுக்கு இடையே கூடலூர் வழியாக செல்வோரும் இந்த அனுமதியை பெற வேண்டும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு செல்வதற்காக வந்த பலர் விண்ணப்பித்தும் இ பதிவு கிடைக்காததால் எல்லையில் நீண்டநேரம் காத்திருந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை முதலே இதற்கான இணைதளம் செயல்படவில்லை என்றும், சென்னையில் தொடர் மழை காரணமாக இணையதள சேவை பாதிக்கப்பட்டதாகவும் இதனால் விண்ணப்பித்தவர்களுக்கு இ பதிவு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி விடுமுறை காரணமாக ஏராளமான வாகனங்கள் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை இப்பதிவு கிடைக்காத வாகனங்களை எல்லை தாண்டி வர அங்கிருந்த அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கர்நாடகா செல்லும் வாகனங்களை உள்ளே வந்து செல்ல அனுமதித்ததோடு நீலகிரி மாவட்டத்திற்குள் வாகனங்களில் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரித்து அவர்களின் விவரங்களையும் சேகரித்து அனுப்பினர். இதைத்தொடர்ந்து 10 மணியளவில் இணையதளம் செயல்பட தொடங்கியது. அதன்பின் வழக்கமாக இணையதளம் மூலம் அனுமதி பெற்று வந்த வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டன.

Tags : Nadukani , Corona, EPass
× RELATED நீலகிரியில் இயற்கையை ரசிக்க...