×

தொடர் மழை எதிரொலி: கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு

ஈரோடு: தொடர் மழையின் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் நேற்று மாட்டு சந்தை கூடியது. ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாகவும், மாடுகளில் தோல் அம்மை நோய் காரணமாகவும் மாட்டு சந்தைக்கு குறைந்தளவே மாடுகள் வரத்தானது. கால்நடைகளை வாங்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். ஆனால், குறைந்தளவே மாடுகள் வரத்தானதால், மாடுகள் விற்பனை மந்தமாக நடந்தது.

இது குறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மாடுகள் வரத்து குறைந்தது. இந்த வாரம் பசு-350, எருமை-150, கன்று-100 என 600 மாடுகள் மட்டுமே வரத்தானது. சந்தைக்கு வரத்தான கறவை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.65ஆயிரம் வரையும், கன்று ரூ.9 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. சந்தைக்கு வந்த மாடுகளில் தோல் அம்மை நோய் தாக்கி உள்ளதா? என கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னரே சந்தைக்குள் அனுமதித்தனர். மேலும் நோய் தாக்கிய மாடுகள் வந்தால், சந்தைக்குள் அனுமதி மறுக்கப்படும். அதேபோல், மாட்டு வியாபாரிகளுக்கும் ஈரோடு மாநகராட்சி சார்பில், காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Karungalpalayam , Rain, market, cows
× RELATED பறக்கும் படை அதிகாரிகளின்...