×

கொட்டித் தீர்த்த கனமழையால் நெல்லையில் 600 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

கேடிசி நகர்: நெல்லையில் கொட்டித் தீர்த்த மழையால் 600க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் பாளை. அண்ணா நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஐகிரவுண்ட், சீனிவாச நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறிய மழைநீர், அண்ணா நகர் ஓடை வழியாக பாளை. வெட்டுவான்குளத்திற்கு செல்லும். ஆனால் தற்போது ஓடை அடைபட்டு மழைநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதையடுத்து வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள் மின்சாதன பொருட்களை அப்புறப்படுத்தி வெளியே எடுத்து வைத்தனர். மேலும் வீடுகளில் தேங்கிய தண்ணீரை வாளி உள்ளிட்ட பாத்திரங்களால் இறைத்து வெளியேற்றினர்.

தகவலறிந்து மாநகராட்சி உதவி ஆணையர் பிரேம்ஆனந்த், உதவி செயற்பொறியாளர் பைஜூ, சுகாதார அலுவலர் சாகுல்அமீது, சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் ஓடையை ஆக்கிரமித்திருந்த மண்ணை அகற்றி தண்ணீரை வடிய வைத்தனர்.

இதேபோல் பாளை மனகாவலம்பிள்ளை நகர் திருவள்ளுவர் தெரு, ஆசாத் தெரு, திருமலை தெரு, வஉசி தெரு ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர், கழிவுநீரோடு கலந்து புகுந்துள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் வீடுகளை வீட்டு வெளியேறினர். இந்த பகுதியில் கழிவுநீர் செல்லும் ஓடையை மறித்து வீடுகள் கட்டியிருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாமல் கழிவுநீரோடு கலந்து கடும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளன. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று பாளை - திருச்செந்தூர் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு மறியலில் ஈடுபட்டவர்கள் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இதே நிலை நீடிப்பதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

சாந்திநகர் - சீவலப்பேரி ரோட்டில் தரைப்பாலத்தின் அடியில் கழிவுநீர் செல்ல சிறிய குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய கொட்டிய மழை காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து பெருக்கெடுத்த மழைநீர், தரைப்பாலத்தின் அடியில் உள்ள குறுகிய குழாய் வழியாக செல்ல முடியாமல் சாந்தி நகர் 1வது மெயின் ரோடு, 3, 4, 5, 6 ஆகிய தெருக்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. எனவே இந்த தரைப்பாலத்தை அகலப்படுத்தி உயர்த்தி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் எம்ஜிஆர் நகர், இந்திராநகர் பகுதியிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வண்ணார்பேட்டை பரணிநகர் பிரதான சாலை, பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் வீடுகளை சூழ்ந்த மழைநீரை வண்ணார்பேட்டை சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் மேற்பார்வையாளர்கள் முனியசாமி, சங்கரன், கோவிந்தன், மகாராஜா ஆகியோர் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வெளியேற்றினர். அவர்கள் அப்பகுதியில் உள்ள பிரதான சாலையின் ஓரமாக குழி தோண்டி, அதில் தேங்கியிருந்த மழைநீரை பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லும் ஓடையில் கலந்து செல்லும்படி செய்தனர்.

Tags : houses ,Nellai , Heavy rain
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...