×

திருச்செந்தூர் கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம்

உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடற்கரையில் இன்று (20ம் தேதி) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா கடந்த 15ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 5ம் திருநாளான நேற்று வழக்கமான சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன் எழுந்தருளியதும் மஹா தீபாராதனை நடந்தது. மாலை வேளையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், அதைத்தொடர்ந்து மஹா தீபாராதனையும் நடந்தது. இருப்பினும் நேற்றும் வழக்கம்போல் தங்கதேர் வீதியுலா நடைபெறவில்லை.

கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், பக்தர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து இன்று (20ம் தேதி) மாலை 4.30 மணிக்கு கோயில் அருகே கடற்கரை முகப்பு பகுதியிலேயே நடத்தப்படுகிறது. ஆனால், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இரவு பகலாக கடற்கரை பகுதியை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் உயர் அதிகாரிகள் செய்துள்ளனர். இதே போல் திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி தலைமையில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags : Thiruchendur ,beach , Thiruchendur
× RELATED சாகுபுரம் அருகே வளைவு பாலத்தில் அபாய பள்ளம் தற்காலிகமாக சீரமைப்பு