×

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட 28,360 பேருந்துகள் வாயிலாக 13,24,553 பயணிகள் பயணம் : ரூ. 5.84 கோடி வருவாய்

சென்னை : தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்ற வகையில், ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சிறப்புப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக, கோவிட் -19 நோய் தொற்று தமிழகத்தில் பெருமளவு குறைந்துள்ளது.  மேலும், இப்பண்டிகையை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லுகின்ற பொதுமக்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில், அரசு செயல்படுத்தியுள்ள வழிக்காட்டுதல்களான, கட்டாய முகக்கவசம், வெப்பமாணி மூலம் பரிசோதனை, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசு செயல்படுத்தியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தப் பண்டிகைக்கு பேருந்துகளை இயக்கிடுமாறு, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டன. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பினையும் பெற்றது.

தீபாவளிக்கு முன்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.  அதனைத் தொடர்ந்து, கடந்த 11.11.2020, 12.11.2020 மற்றும் 13.11.2020 ஆகிய தேதிகளில் சென்னையில் 6 இடங்களிலிருந்து மொத்தம் 8,753 பேருந்துகள் இயக்கப்பட்டு, 3,97,553 பயணிகளும், பல்வேறு பகுதிகளிலிருந்து மற்ற பிற ஊர்களுக்கு 4,564 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,28,000 பயணிகளும்  என மொத்தமாக 13,317 பேருந்துகள் வயிலாக, 6,25,553 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

தீபாவளிக்கு பின்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், கடந்த 15.11.2020, 16.11.2020, 17.11.2020 மற்றும் 18.11.2020 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 10,414 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4,68,000 பயணிகளும்,  பல்வேறு இடங்களிலிருந்து மற்ற பிற ஊர்களுக்கு 4,629 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,31,000 பயணிகளும் என மொத்தமாக 15,043 பேருந்துகள் வாயிலாக, 6,99,000 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த வருட தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில், மொத்தமாக இயக்கப்பட்ட 28,360 பேருந்துகள் வாயிலாக, 13,24,553 பயணிகள் பயணம் செய்துள்ளார்.

முன்பதிவு:
    
தமிழகம் முழுவதும் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.  இதன் வாயிலாக மொத்தமாக 5 கோடியே 84 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Tags : passengers ,Tamil Nadu ,Diwali , Deepavali, buses, revenue
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...