×

அகரத்தில் ஆறு உறைகிணறுகள் திசை மாறிய வைகை ஆற்றிற்கு சான்று

திருப்புவனம்: அகரத்தில் கண்டறியப்பட்ட உறைகிணறுகள் திசை மாறிய வைகை ஆற்றிற்கு சான்றாக இருக்கக்கூடும் என வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் 6ம் கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது. அகரத்தில் தங்க நாணயம், கெண்டி மூக்கு பானை உள்ளிட்ட 1,020 பொருட்கள் கண்டறியப்பட்டன. அகரம் அகழாய்வில் 26 அடுக்கு மற்றும் 4 அடுக்குகள் கொண்ட உறைகிணறுகள் கண்டறியப்பட்டிருந்தன.

தற்போது அகழாய்வின் முடிவில் அகரத்தில் மட்டும் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த 6 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆறரை மீட்டர் உயரத்தில் 26 அடுக்குகள் கொண்ட உறைகிணறு, 8 அடுக்குகள் கொண்ட உறைகிணறு, 6 அடுக்குகள் கொண்ட உறை கிணறு, மூன்று அடுக்குகள் கொண்ட உறைகிணறு, ஒரு அடுக்கு கொண்ட உறைகிணறு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.
வரலாற்று பேராசிரியர் (ஓய்வு) மணலூர் முத்துச்சாமி கூறுகையில், ‘‘ஆறுகள் சுனாமி, வெள்ளச்சீற்றம் உள்ளிட்ட காலக்கட்டங்களில் திசை மாறிச் செல்லும் என கருதப்படுகிறது.

அதன்படி தேனி மாவட்டம், வருசநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு இதுவரை மூன்று முறை திசை மாறியுள்ளது என கூறப்படுகிறது. ஏற்கனவே இருமுறை திசை மாறிய வைகை ஆற்றின் தடம் கண்டறியப்படவில்லை.தற்போது கீழடி, அகரத்தில் கிடைத்த உறை கிணறுகளின்படி வைகை ஆற்றின் தடம் கீழடி, அகரம் வழியாக சென்றிருக்க வாய்ப்புள்ளது. காரணம் ஆற்றினுள்தான் தற்போது கூட கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் தோண்டப்படுகின்றன. எனவே பண்டைய காலக்கட்டத்தில் ஆற்றுப்படுகையில்தான் உறைகிணறுகள் இருந்திருக்க கூடும். தற்போது வெளிப்பட்டுள்ள உறைகிணறுகள் அதற்கான சான்றாக இருக்க கூடும். அடுத்தடுத்த ஆய்வுகளில் இது உறுதியாக தெரியவரும்’’என்றார். டேராடூன் பல்கலை கழக பேராசிரியர்கள் குழு அகரத்தில் உள்ள மண் அடுக்குகளை நீண்ட கால ஆய்விற்கு எடுத்து சென்றுள்ளனர். ஆய்வு முடிவுகள் வெளியாகும் போது உறைகிணறுகளின் காலக்கட்டங்களும் தெரிய வரும்.

Tags : Vaigai River ,bore wells , Vaigai, river
× RELATED மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்...