×

பலாத்கார புகாரை வாபஸ் பெறாததால் கொடூரம் :உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் எரித்து கொலை

லக்னோ, :பலாத்கார புகாரை வாபஸ் பெறாததால், தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக லக்னோ போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆக.15ம் தேதி, அவர் வசிக்கும் அதே பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்த இளைஞர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பான புகாரில், போலீசார் வழக்குப்பதிந்து, அந்த இளைஞரை கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  பலத்த தீக்காயங்களுடன் லக்னோ மருத்துவமனைக்கு, அந்த இளம்பெண் கொண்டுவரப்பட்டார். அவரது நிலை மோசமாக இருந்ததால், மேல்சிகிச்சைக்காக அவர் உடனடியாக டெல்லிக்கு அனுப்பப்பட்டார். டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, நேற்று  அவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக லக்னோ எஸ்.பி சந்தோஷ்குமார் சிங் கூறுகையில், ‘‘ இது சாதாரண தற்கொலை முயற்சி என்றே போலீசார் நினைத்தனர். அந்த இளம்பெண்ணின் தந்தை வந்து, புகார் கொடுத்த பின்னர்தான், அவர் 3 மாதங்களுக்கு முன்னர் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்பதும், அது தொடர்பான புகாரை வாபஸ் பெறாததால், அவர் தீ வைத்து எரிக்கப்பட்டார் என்பதும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு, 3 பேரை கைது செய்துள்ளனர். பலாத்காரம் செய்த இளைஞரின் மாமா ஒருவரும், 2 நண்பர்களும் சேர்ந்து, அந்தப் பெண் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளனர்.
இளம்பெண்ணை அவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இது குறித்து அப்பெண்ணின் குடும்பத்தினரும் புகார் செய்துள்ளனர். அந்தப் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தாமல், அலட்சியமாக இருந்த 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஹத்ராஸ் மாவட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட பட்டியலினப் பெண்ணின் உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எரித்த விவகாரம், இன்னும் மாநிலத்தில் பற்றி எரிகிறது. இந்த நிலையில் பலாத்காரப் புகாரை வாபஸ் பெறாததால், இளம்பெண் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவம், உபி மாநில அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Teen ,Uttar Pradesh ,death , Rape Complaint, Withdrawal, Cruelty, Uttar Pradesh, Teen
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...