×

7 பேர் விடுதலையில் நியாயமும் தர்மமும் உள்ளது: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் பார்த்திபன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கை!!

சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏழு பேர் விடுதலையில் மாநில ஆளுநர் தலையிட்டு முடிவெடுக்கலாம் என்று கூறியது. அதே சமயம் ஏழு பேர்  விடுதலைக்கு ஒப்புக்கொண்ட தமிழக அரசு, ஆளுநரிடம் அதற்கான கோப்புகளை அனுப்பியுள்ளது.ஆனாலும் பல மாதங்களை கடந்தும் ஆளுநர் எழுவர் விடுதலையில் இன்னும் எந் முடிவும் எடுக்கவில்லை.அதேசமயம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இதனால் விரைவில் எழுவர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி . சண்முகம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல், பேரறிவாளன் விடுதலைக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் பதவியின் கண்ணியத்தை காப்பாற்றுங்கள் என விசிக எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மேதகு ஆளுநர் அவர்களே! உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பே பேரறிவாளன் விடுதலைக்கு ஒப்புதல் வழங்குங்கள்! ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்.இந்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டுக்கு வருவதற்குமுன்பு தமிழக ஆளுநர் பேரறிவாளனின் விடுதலைக்கு ஒப்புதல் அளிப்பாரா? திரு அமித்ஷாவை வரவேற்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் தமிழக அரசு இதை ஆளுநரிடம் வலியுறுத்துமா? எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அற்புதம் அம்மாள் நீதித்துறையின்பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும் அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், செய்யாத குற்றத்திற்காக 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள மகன், மகனை மீட்க 30 ஆண்டுகளாக போராடும் தாய், பேரறிவாளனுக்கு நீதி வழங்க வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் தமிழக கவர்னர் ஆகிய தயவுசெய்து பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த நேரத்திலாவது தாய் மற்றும் மகன் இருவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என ஆளுநர், முதல்வரை கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக  நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Karthik Supuraj ,release ,actors ,Prakashraj ,Parthiban , Karthik Supuraj, Actors, Parthiban, Prakashraj
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி