×

காப்பீடு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொண்டால் வாகனங்களின் போலி காப்பீடு மோசடியில் இருந்து தப்பிக்கலாம்: வாகன உரிமையாளர்களுக்கு, காப்பீட்டு நிறுவனங்கள் அறிவுரை

சிறப்பு செய்திகாப்பீடு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொண்டால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலி காப்பீடு மோசடியில் இருந்து தப்பிக்கலாம் என வாகன உரிமையாளர்களுக்கு, காப்பீட்டு நிறுவனங்கள் அறிவுரை வழங்கியுள்ளது. எங்கும் போலி. எதிலும் போலி என்பது போல தற்போது நாம் உண்ணும் உணவில் இருந்து பயன்படுத்தும் பொருட்கள் வரை எது உண்மை தன்மை உள்ளவை. எது போலி என்பது குறித்து நமக்கே தெரியாமல் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுது அதனால் பிரச்னை ஏற்படுகிறதோ அப்போது தான் இதுபோலி என்பது நமக்கு கண்கூடாக தெரிகிறது. அதுவரை உண்மை என்று நினைத்து போலியின் மீது நாம் சவாரி செய்து கொண்டிருப்போம். அந்த வகையில், வாகன காப்பீடு என்பது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. வாகன காப்பீடு என்பது மோட்டார் வாகன சட்டம் 1988ன்படி சாலையில் செல்லும் ஒவ்வொரு வாகனங்களும், காப்பீடு செய்யப்பட்டிருப்பதை குறிக்கும். மேலும், அதற்கான ஆதாரத்தை சம்பந்தப்பட்ட நபர்கள் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். அந்த வகையில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் கண்டிப்பாக தங்களது வாகனங்களுக்கு காப்பீடு செய்து அதற்கான நகல்களை எப்போதும் வண்டிக்குள் வைத்திருப்பது வழக்கம். அந்த வகையில், முதன் முதலில் வாகனம் வாங்கும்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம், காப்பீடு செய்யப்பட்டு அதனை நாம் பயன்படுத்துவோம். இது முழுக்க முழுக்க பாதுகாப்பானதாக இருந்து வந்தது. அதன் பின்னர் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காப்பீடு நிறுவனங்களை தொடர்பு கொண்டு பணம் கட்டி காப்பீடு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் காப்பீடு காலவதி ஆகிவிடும் அந்த வகையில் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஆண்டுதோறும் தங்களது காப்பீட்டை புதுப்பித்து வருகின்றன. அவ்வாறு புதுப்பிக்கப்படும் போது சிலர் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது இன்சூரன்ஸ் எனப்படும் காப்பீட்டை புதுப்பித்துக் கொள்கின்றனர். மேலும், சிலர் அதற்கான ஏஜென்ட்டை தொடர்பு கொண்டு பழைய நகலை அவர்களிடம் கொடுத்து பணத்தையும் கொடுத்து காப்பீட்டை புதுப்பித்து தரும்படி கேட்டுக் கொள்கின்றனர். அவ்வாறு வாகன உரிமையாளர்களிடம் இருந்து பணம் மற்றும் இரு சக்கர வாகன காப்பீடு நகலை பெற்றுக் கொள்ளும் முகவர்கள் அதனை தங்களது குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தி புதுப்பித்து மீண்டும் வாகன உரிமையாளரிடம் ஒப்படைக்கின்றனர். இவ்வாறு சென்று கொண்டிருக்க ஒரு சில முகவர்கள் இதில் தவறு செய்வதாகவும், இதனால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்படுவதாகும் சமீபத்தில் தெரியவந்துள்ளது. கடந்த, சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது வியாசர்பாடியை சேர்ந்த துரை என்பவரின் காரில் தண்ணீர் அதிகமாக சென்று கார் முழுவதும் பழுதாகிவிட்டது. இதற்காக அவர் காரை சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டு இன்சூரன்ஸ் பணத்தில் காரை ரெடி செய்யும்படி கூறினார். அந்த நிறுவனம் அவரது இன்சூரன்ஸ் நம்பரை செக் செய்துவிட்டு, இந்த வண்டிக்கு இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை காலாவதியாகிவிட்டது என தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த துரை இன்சூரன்ஸ் கம்பெனியை தொடர்பு கொண்டு கேட்டபோது, உங்களது காப்பீடு காலாவதியாகிவிட்டது நீங்கள் அதன்பின்பு காப்பீடு செய்யவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த துரை அந்த காரை வாங்கிய இடமான கொளத்தூர் 100 அடி சாலையில் உள்ள தனியார் கார் சென்டருக்கு சென்று கேட்டுள்ளார். அவர்கள் காரை விற்ற நபர் இன்சூரன்ஸ் போட்டு தான் கொடுத்தார் என அவர் மீது பழியை போட்டுள்ளனர். உடனே ஆர்.சி புக்கில் உள்ள முகவரியை வைத்து குறிப்பிட்ட காரை விற்ற நபர்களை தேடி கண்டுபிடித்து கேட்டபோது நாங்கள் காரை விற்க்கும் போது எங்களது காரில் இன்சூரன்ஸ் காலாவதியாகி இருந்தது என கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த துரை தனது நண்பர்களுடன் மீண்டும் அதே கார் சென்டருக்கு சென்று தனது ஸ்டைலில் கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அந்த நபருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் எனக்கூறி அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில், காரை விற்ற பெண்மணியிடம் இருந்து காரை வாங்கிய அந்த தனியார் கார் ஏஜென்சி போலியாக காப்பீடு நகலை தயார் செய்து காரை விற்றுள்ளது இதன் மூலம் ஒரு வண்டிக்கு முப்பதாயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை அவர்களுக்கு மிச்சமாகிறது. இன்சூரன்ஸ் போடும் அனைத்து வாகனங்களும் அதை பயன்படுத்துவது கிடையாது 100 வண்டிகள் இன்சூரன்ஸ் போடுகிறார்கள் என்றால் அதில் குறைந்தது 15 வண்டிகள் மட்டுமே விபத்துக்குள்ளாகி மற்றும் காணாமல்போய் அந்த காப்பீட்டை பயன்படுத்துகிறார்கள் மற்ற வாகனங்கள் பணத்தைக் கட்டி அப்படியே விட்டு விடுகின்றனர். மீண்டும் அடுத்த ஆண்டு புதுப்பித்துக் கொள்கின்றனர் இதனால் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கிறது.இதனை மனதில் வைத்து தற்போது புதிது புதிதாக காப்பீட்டு நிறுவனங்கள் முளைத்து விட்டன கோல்ட் லோன் தரும் கம்பெனிகள் எல்லாம் தற்போது காப்பீட்டு சந்தைக்குள் நுழைந்து தங்களது வியாபாரத்தை பெருக்கி வருகின்றனர். இதனை வைத்து காப்பீட்டு நிறுவனங்கள் அதிகரித்து விட்டதால் எந்த காப்பீடு நிறுவனம் என்பதே தெரியாமல் பலரும் பணம் குறைவாக கட்டினால் போதும் என்ற எண்ணத்தில் யார் என்ன என்று தெரியாமல் வந்தவர்களிடம் எல்லாம் பணத்தை கொடுத்து ஏமாந்து நிற்கின்றனர். எது அசல் எது போலி என தெரியாமல் பொதுமக்கள் சில இடங்களில் குழம்பி நிற்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல் ஒரிஜினல் காப்பீட்டு பத்திரத்தில் என்ன உள்ளனவோ அதை அப்படியே காப்பி அடித்து தேதி மாதம் வருடம் இதை மட்டும் மாற்றி போலியான காப்பீடு நகல்களை தயார் செய்து வாகன உரிமையாளர்களை ஏமாற்றி வருகின்றனர். இதனை தடுக்க எது அசல் எது போலி என்பதை பொதுமக்கள் நன்றாக கவனிக்க வேண்டும் என்றும் குறைவான விலையில் காப்பீடு செய்து தருகிறோம் என வரும் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் காப்பீட்டு நிறுவனங்கள் எச்சரிக்கின்றனர்.* அனைத்தும் ஆன்லைன்வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் வாகனங்களை மடக்கிப் பிடிக்கும்போது, குறிப்பிட்ட அந்த வாகன எண்களை அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் போட்டு சோதனை செய்யும்போது அந்த வாகனத்தின் உரிமையாளர் பெயர் காப்பீடு விவரம் உள்ளிட்டவை வரும் பழைய வண்டிகளுக்கு மட்டுமே காப்பீடு விவரங்கள் வராது. எனவே, அதை மட்டும் உரிமையாளரிடம் கேட்டு வாங்கி சோதனை செய்கின்றனர். தற்பொழுது காப்பீட்டைப் பொறுத்தவரை அனைத்தும் ஆன்லைன் பயமாகிவிட்டதால் குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் காப்பீட்டின் விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றிய உடன் அது காவலர்களுக்கும் தெரிய வருகிறது. இதன் மூலம் போலியாக காப்பீட்டு நகல்களை தயார் செய்யும் நபர்கள் மாட்டிக்கொள்வார்கள் எனவும் பழைய வாகனங்களில் மட்டுமே இதை கண்டுபிடிக்க முடியாது எனவும் போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.* வரைமுறைப்படுத்த வேண்டும்காப்பீடு என்பது வாகனத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல் அதனை பயன்படுத்துபவரின் உயிர் சம்பந்தப்பட்டதாகவும் உள்ளதால் தற்போது புதிது புதிதாக காப்பீட்டு நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. எனவே, இதனை வரைமுறைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அதே போன்று போலியாக காப்பீடு செய்வது அல்லது காப்பீடு நகல்களை தயார் செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.* எப்படி கண்டுபிடிக்கலாம்நாம் ஒருவரிடம் நமது பழைய காப்பீடு நகல் மற்றும் பணத்தை கொடுத்து புதிதாக காப்பீடு செய்து தரும்படி கொடுத்து அனுப்பி அதன்பின்பு புதிய நகல் வந்ததும் அதனை சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தின் வெப்சைட்டில் சென்று நமது வண்டியின் பதிவெண்ணை அதில் செலுத்தி காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் போலியாக காப்பீடு செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட்ட அந்த காப்பீடு நிறுவனத்தின் வெப்சைட்டில் நமது வண்டியின் எண் காட்டாது. இதன்மூலம் நம்மை ஏமாற்றி உள்ளார்கள் என்பதை கண்டுபிடித்து விடலாம். மேலும், தற்போது காப்பீடு என்பது ஆன்லைன் மூலம் மிகவும் எளிதாகி விட்டது. எனவே, காப்பீடு செய்ய விரும்பும் நபர்கள் புரோக்கர்களை நம்பாமல் குறிப்பிட்ட நல்ல காப்பீடு நிறுவனங்களை ஆன்லைன் மூலம் அணுகி காப்பீடு செய்து கொள்ளலாம்….

The post காப்பீடு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொண்டால் வாகனங்களின் போலி காப்பீடு மோசடியில் இருந்து தப்பிக்கலாம்: வாகன உரிமையாளர்களுக்கு, காப்பீட்டு நிறுவனங்கள் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!