×

ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் பினாமி பெயர்களில் பெட்ரோல் பங்க் ஆம்னி பஸ்களை வாங்கிய துரைக்கண்ணு: விசாரணை வளையத்திற்குள் பஞ்.தலைவர்கள்

சென்னை: தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பால் சமீபத்தில் இறந்ததார். தஞ்சை மாவட்டத்தில் தொகுதிகளை பலப்படுத்த ஆளும்கட்சி தரப்பில் அவரிடம் கொடுக்கப்பட்டிருந்த ₹800 கோடி என்னவானது என தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் துரைக்கண்ணுவும், மகன் ஐயப்பனும் ₹5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்களை பினாமிகள் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் வாங்கி குவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் துரைக்கண்ணுவின் பினாமி என்று கூறப்படுபவரும், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவருமான கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவரான பாமகவை சேர்ந்த பெரியவன் (எ) முருகனின் கூட்டாளிகளை ரவுடியிசம் என்ற பேரில் போலீசார் கைது செய்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் முருகனின் கூட்டாளிகளான கும்பகோணத்தை சேர்ந்த சேபி சரவணன் (48), கள்ளப்புலியூர் சரவணன் (34) ஆகியோரை கும்பகோணம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் ரவுடி லாலி மணிகண்டன் (38) என்பவரையும் திருவிடைமருதூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

இந்நிலையில் துரைக்கண்ணு இறப்பதற்கு முன்னும், பின்னும் மூட்டை மூட்டையாக பணம் பலருக்கு கைமாறியுள்ளது. இதில் 40 சதவீதம் பணம் துரைக்கண்ணவின் பினாமிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடமிருந்து போலீசார் மூலம் பறிமுதல் செய்து கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீதி பணத்தையும் மீட்க ஆளுங்கட்சி தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சில உயர் போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், துரைக்கண்ணுவுக்கு தஞ்சையில் பினாமி பெயரில் ஆம்னி பஸ்கள் இயங்குவதும், மேலும் பெட்ரோல் பங்க்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விஷயமறிந்த அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது:

துரைக்கண்ணு அமைச்சராக இருந்து கொண்டே மாவட்டத்தை வளைத்து போட்டு சொத்துக்கள் வாங்கி குவித்தும், பல்வேறு தொழில்களை பினாமி பெயர்களிலும் செய்து வந்துள்ளார். ஜெயலலிதாவின் சொத்து குவிப்பை மிஞ்சும் அளவுக்கு துரைக்கண்ணு சொத்து குவித்து உள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் துரைக்கண்ணு மூலம் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு அவரிடமே பணம் பெற்று தொகுதி மக்களுக்கு 500, 1,000, 2,000 கொடுத்து வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் பலரும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படவுள்ளதால் அனைவரும் கிலியில் உள்ளனர்.


Tags : Durakkannu ,Omni ,Jayalalithaa ,leaders ,Panj , Durakkannu buys petrol punk Omni buses under pseudonyms to outdo Jayalalithaa: Panj leaders inside trial ring
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி