×

இரண்டாம் நாள் எம்பிபிஎஸ் கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் நிறைவு: 47 பி.டி.எஸ் இடங்களுக்கு இன்று கலந்தாய்வு: 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை: மருத்துவ கலந்தாய்வில் இரண்டாம் நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 313 எம்பிபிஎஸ் சீட்டுகள் இடஒதுக்கீட்டின்படி நிறைவு பெற்றது. 2ம் நாளாக நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் 303 மாணவர்கள் பங்கேற்றனர். 3 மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளிலும், 82 மாணவர்களுக்கு தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைத்தன. 5 மாணவர்கள் அரசு பல் மருத்துவ கல்லூரிகளையும், 33 மாணவர்கள் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளையும் தேர்ந்தெடுத்ததை அடுத்து நேற்றைய கலந்தாய்வில் மொத்தம் 123 இடங்கள் நிரப்பப்பட்டன. 180 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் நாள் கலந்தாய்வில்  கலந்துகொண்டவர்களில் 4  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து  சமூக இடைவெளி மற்றும் கொரோனா  தொற்றை தடுப்பதற்கான கூடுதல் பாதுகாப்பு  செய்யப்பட்டு நேற்று கலந்தாய்வு நடைபெற்றது.

7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 எம்.பி.பி.எஸ் இடங்களும்  தனியார் மருத்துவ கல்லூரிகளில் 86 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 313 எம்.பி.பி.எஸ் இடங்களும் நேற்றைய கலந்தாய்வில் நிரம்பின.  மேலும் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 12 பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பு இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவ கல்லூரியில் உள்ள பி.டி.எஸ் இடங்கள் நிறைவடைந்த நிலையில்  தனியார் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 47 பி.டி.எஸ் இடங்களுக்கு  இன்று கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

முதல் நாள் கலந்தாய்வில் அரசு  கல்லூரிகளில் உள்ள 224 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பட்டதை அடுத்து 3  இடங்கள் மட்டுமே மீதம் இருந்தன. நேற்று நடைபெற்ற  கலந்தாய்வில் தரவரிசை அடிப்படையில் முதலில் பங்கேற்ற மாணவர்கள் அரசு  கல்லூரிகளை தேர்ந்தெடுத்துவிட்டதால் அடுத்து வந்தவர்கள் தனியார் கல்லூரிகளை  தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் கட்ட வேண்டி இருப்பதால் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பை நிராகரித்தனர்.  

இருப்பிட சான்றிதழ் முறைகேடுகளை கண்காணிக்க 5 பேர் குழு
இருப்பிட சான்றிதழ் குளறுபடிகளை கண்காணிக்க ராஜிவ் காந்தி மருத்துவமனை தடயவியல் துறை தலைவர் பராசக்தி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை துணை இயக்குனர் இந்துமதி, கலந்தாய்வு செயலர் செல்வராஜ், மருத்துவர்கள் ராஜசேகர், ஆவுடையப்பன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு நியமிகப்பட்டுள்ளது.

முதல்வருடன் புகைப்படம் எடுத்த 4 பேருக்கு கொரோனா
முதல்நாள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற   மாணவர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்ட பின்பு கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. மாணவர்கள் கல்லுரிகளை தேர்வு செய்த பின்னர் முதல்வருடன் புகைப்படம் எடுத்து சென்றனர். இந்த நிலையில் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



Tags : places ,seminar ,government school students ,BDS ,Consultation ,Corona , MBBS seats for state school students completed the second day of the conference: 47 pities destinations discussion today: 4 students Corona infection
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!