×

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் மறைந்த சிஆர்பிஎப் வீரரின் மனைவிக்கு 18 ஆண்டுக்கு பிறகு நிவாரண தொகை

புதுடெல்லி: காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலின்போது உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் மனைவிக்கு 18 ஆண்டுகளுக்கு பின் ரூ.20 லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப். படையை சேர்ந்த ரமேஷ் குமார் என்ற வீரர், 2002ம் ஆண்டு நடந்த ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, தோடா நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் அவர் வீரமரணம் அை டந்தார். இவரது மனைவி பிரமிளா தேவி அரியானாவின் பிவானியில் வசித்து வருகிறார். தனது கணவர் மறைவுக்கு பின்னர் கருணை தொகை வழங்காதது குறித்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில்  தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கை ஜம்மு காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில்,  தலைமை தேர்தல் ஆணையர் அரோராவுக்கு கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இ-மெயில் மூலமாக பிரமிளா கடிதம் அனுப்பினார். இதற்கு தலைமை தேர்தல் ஆணையர் அரோரா அளித்த பதிலில், ‘இந்த  தாமதத்துக்காக  மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் கணவரின் உச்சப்பட்ச தியாகம் எப்போதும் நினைவில் இருக்கும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து, அவருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு  கருணைத் தொகை கிடைத்துள்ளது. 2002ல் இதுபோல் பணியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு  ரூ.5 லட்சம்தான் கருணை தொகை கிடைக்கும். இப்போது, அது ரூ.20 லட்சமாக உயர்ந்துள்ளது. எனவே, பிரமிளாவுக்கு அரோராவின் கருணையால் ரூ.20 லட்சம் கிடைத்துள்ளது.

Tags : soldier ,elections ,CRPF ,Kashmir ,Jammu , Relief after 18 years for wife of late CRPF soldier in Jammu and Kashmir elections
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...