பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு காஞ்சி வருகை

காஞ்சிபுரம்: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு காஞ்சிபுரம் வந்தது. அதில், பயிர்க்கடன்களை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. தமிழகத்தில் 2021  சட்டமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு நேற்று காஞ்சிபுரம் வந்தது. இகுழுவில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர்களான திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, தேர்தல் பணிக்குழு உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், காஞ்சி வடக்கு, தெற்கு மாவட்ட செயலாளர்கள்  தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, க.சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்பி ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, வக்கீல் எழிலரசன், கருணாநிதி, ஆர்.டி.அரசு, எஸ்.புகழேந்தி, வரலட்சுமி மதுசூதனன், இதயவர்மன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது தொகுதிகளில்  உள்ள தேர்தல் தொடர்பான கருத்துக்களை தேர்தல் தயாரிப்பு குழுவினரிடம் தெரிவித்தனர்.

அதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர்கள் சார்பில் பட்டு, நூல் கொள்முதல் மானியத்தை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதேபோல் விவசாயிகள் மேம்பாடு அடைய பயிர்க்கடன்களை ரத்து செய்யவேண்டும். மானிய விலையில் வேளாண் கருவிகள், விதைகள் வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், பொது நல அமைப்புகள், வியாபாரிகள், தனி நபர்கள் ஆகியோர் நேரடியாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரை சந்தித்து மனுக்களை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>