×

ஜம்மு காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க பாக்.கில் இருந்து ஊடுருவல் ஜெய்ஷ் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை: லாரியில் பதுங்கி வந்தபோது அதிகாலையில் அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடக்க உள்ள மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்த, ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 4 பயங்கர தீவிரவாதிகளை ள் 4 பேரை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தானில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு பகுதிகள் வழியாக வழக்கம்போல் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சிகள் அதிகமாகி உள்ளது. இதை தடுப்பதற்காக எல்லை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு உதவும் வகையில், இந்திய படைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக எல்லையில் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீர், டாக்கில் பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்ரோடாவில்   நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சம்பாவில் இருந்து வந்த லாரியை பான் சுங்க சாவடி அருகே அதிகாலையில்  பாதுகாப்பு படையினர் சோதனை செய்ய முயன்றனர். அதன் அருகில் வீரர்கள் சென்றபோது, அதில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே, அந்த லாரியை சுற்றிவளைத்து வீரர்கள் தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் தொடங்கிய இந்த தாக்குதல் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதில், லாரியில் இருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 11 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 3 கைதுப்பாக்கிகள், 29 கையெறி குண்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. கொல்லப்பட்ட 4  தீவிரவாதிகளும், பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘ஜெய்ஸ் இ முகமது’ தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என, விசாரணையில் உறுதியாகி உள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு
ஜம்மு காஷ்மீர் ஐஜி குமார் அளித்த பேட்டியில், ‘‘கடந்த சில நாட்களாகவே தீவிரவாதிகளை ஊடுருவ செய்து, மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் பணிகளை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளும் இந்த தேர்தலை சீர்குலைப்பதற்காக ஊடுருவி வந்துள்ளனர். இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இவர்களுக்கு தனித்தனியாக பாதுகாப்பு வழங்குவது கடினம். ஆகவே, பாதுகாப்பான இடத்தில் அவர்கள் பிரசாரம் செய்வதற்கு, பாதுகாப்பு அளிக்கப்படுகிறது,’’ என்றார். வரும் 22ம் தேதி துவங்கும் இத்தேர்தல், டிசம்பர் 22ம் ேததி முடிகிறது. வாக்கு எண்ணிக்கை அன்றே தொடங்க உள்ளது.

இந்திய நிலைகள் மீது தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம்  நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எல்லைப்புற நிலைகள், கிராமங்கள் மீது சிறிய ரக வெடிகுண்டுகள், நவீன துப்பாக்கிகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் தாக்குதலில் மன்யாரி கிராமத்தை சேர்ந்த பெண் காயமடைந்தார். பல்வேறு வீடுகளும், கட்டிடங்களும் பாகிஸ்தானின் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

ஊடுருவலுக்கு
சாதகமான காலம்
எல்லைப் பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் ராகேஷ் அஸ்தனா கூறுகையில், ‘‘எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி அதிகமாக உள்ளது. பனிப்பொழிவுக்கு முந்தைய காலம் என்பதால், இது ஊடுருவலுக்கு சாதகமாக உள்ளது. எனவே. இந்த ஊடுருவலை முறியடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத்துக்கு 10 ஆண்டுகள் சிறை
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, ‘ஜமாத் உத் தவா’ தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சையத். இந்தியாவில் பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய இவன், கடந்த 2014ம் அண்டு சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டான். அவனது தலைக்கு ரூ.1 கோடி பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு நிதியுதவி அளித்த வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை 17ம் தேதி பாகிஸ்தானில் ஹபீஸ் சையத் கைது செய்யப்பட்டான். கடந்த பிப்ரவரியில் 2 தீவிரவாத நிதியுதவி வழக்கில் அவனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, லாகூரில் உள்ள கோட் லக்பாத் சிறையில் அவன் அடைக்கப்பட்டான். இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பான மேலும் 2 வழக்கில் ஹபீஸ் சையத் உட்பட ஜமாத் உத் தவா அமைப்பை சேர்ந்த 4 பேருக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.



Tags : Pakistan ,elections ,militants ,Jaish ,Jammu and Kashmir , Infiltration from Pakistan to disrupt elections in Jammu and Kashmir 4 Jaish militants shot dead: Early morning action while lurking in a lorry
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்