×

விஐபிக்காக குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நிலையில்குழந்தைகள் கடத்தலை அரசு தடுக்க தவறிவிட்டது: ஐகோர்ட் கடும் கண்டனம்

* லாப நோக்கில் செயல்படும் குழந்தைகள் காப்பகங்களால் தான் ஆதரவற்ற குழந்தைகள்  பாதிக்கப்படுகிறார்கள்.
* காப்பகத்தில் உள்ள குழந்தைகள் கடவுளின் பிள்ளைகள் என்பதால் தான் அவர்கள் மீது அரசு  அக்கறை கொள்ளவில்லை.

சென்னை: தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் ஜனவரி 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னையில் பாரிமுனை பகுதியில் 2016ம் ஆண்டு தெருவோரம் தூங்கிய 8 மாத குழந்தை ராகேஷ் மற்றும் வால்டாக்ஸ் சாலையோரம் தூங்கிய சரண்யாவும் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கக்கோரி எக்ஸ்னோரா அமைப்பின்  நிறுவனர் நிர்மல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். ஏற்கனவே இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு   நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 அப்போது, குழந்தை கடத்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘‘குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் சிறார் நீதிச்சட்ட விதிகளை பின்பற்றாமல் செயல்படும் சிறார் காப்பகங்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? லாப நோக்கில் செயல்படும் இது போன்ற  காப்பகங்களால் தான் ஆதரவற்ற குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா பேரிடர் காலத்தில் இது போன்ற காப்பகங்களில் தங்கியிருந்த ஆதவற்ற குழந்தைகள் மற்றும் சிறார்களின் நலனுக்காக ஒரு பொதுநல வழக்கு கூட தொடரப்படவில்லை. தமிழக அரசும் அவர்கள் குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதால் தான் அவர்கள் மீது யாரும் அக்கறை கொள்ளவில்லையா?

 பல டிராபிக் சிக்னல்களில் ஏராளமான  குழந்தைகளை வைத்து, வட மாநில பெண்கள் பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது. அவர்கள் வைத்திருப்பது கடத்தப்பட்ட குழந்தைகளா? அந்த குழந்தைகள் மயங்கிய நிலையிலேயே உள்ளனர். அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தப்படுகிறதா என்பது குறித்து ஏன் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வதில்லை? அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்தால் வழக்குகள் பெருகாது. விஐபிக்கள் தொடர்பு இருந்தால் மட்டும்தான் எப்ஐஆர் போட்டு குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்கிறீர்கள். காலியாக உள்ள மாநில குழந்தைகள் நல ஆணைய பதவிகள் ஏன் நிரப்பப்படவில்லை. இந்த நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு முதல் பல உத்தரவுகள் பிறப்பித்தும் குழந்தை கடத்தல் வழக்குகளுகளை காவல்துறையினர் முறையாக கையாளவில்லை.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழகத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 25ம் தேதி சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Government ,child abduction ,iCourt , For VIP criminals, thugs, arrested under the government failed to prevent the transmission of nilaiyilkulantaikal: HC Denounced
× RELATED வைகை, காவேரி, குண்டாறு இணைப்பு தமிழக...