ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தந்தது பற்றி முதல்வர் வாய் திறக்காதது ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆழ்கடல் பகுதியில் அனுமதி வழங்கியது குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏதும் கூறாதது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த திமுக நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் டி.சத்தியேந்திரன் உருவப்பட திறப்புவிழா நேற்று நடைபெற்றது. திருவுருவப் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். இதைத்தொடந்து அவர் ஆற்றிய உரை:டி.சத்தியேந்திரனின் படத்தை கனத்த இதயத்துடன் திறந்து வைக்கிறேன். நம்மையெல்லாம் விட்டு இளம் வயதிலேயே பிரிந்து சென்று விட்டார். அதை நினைத்துப் பார்க்கவே என் மனம் மறுக்கிறது. அரசியலில் நேர்மை எடப்பாடி பழனிசாமி அகராதியில் இல்லை. பொது வாழ்வில் தூய்மை அதிமுக அமைச்சர்களிடம் அறவே இல்லை. வரைவு வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்துங்கள். அதிமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட இதுதான் நம் கையில் கிடைத்துள்ள ஆயுதம்.

தமிழகத்தின் கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. காவிரிப் படுகையில் மட்டும் 6 வட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து இதுவரை காவிரி டெல்டாவில் உள்ள அதிமுக அமைச்சர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. ஏன் முதலமைச்சரோ, தமிழக அரசோ எதுவுமே கூறவில்லை. இப்படித்தான் அதிமுக அரசும், அதன் அமைச்சர்கள், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரும் தமிழக உரிமைகளைத் தாரை வார்க்கிறார்கள். ஆகவே, ஊழல் அதிமுக ஆட்சியை, ஊழல் முதலமைச்சர் பழனிசாமியை வீட்டுக்கு அனுப்பிட ஏன் தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் பின்னுக்குத் தள்ளிய இவர்களை அரசியலை விட்டே துறவறம் போக வைக்க திமுகவினர் அனைவரும் கட்டுக்கோப்பாகக் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு உரையாற்றினார்.

Related Stories:

>