×

ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய நாட்டு தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கை:செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் - ஆய்வாளர் - பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.பொன்னியும் - வைகையும் - பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை - இலக்கியத்தினை - வரலாற்றினை வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர் துப்யான்ஸ்கி.

சோவியத் யூனியனில் இருந்த பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்தபிறகு, அங்கே தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்து போன நிலையில், பேராசிரியர் துப்யான்ஸ்கி தன் சொந்த முயற்சியாலும் ஆய்வுப் பார்வையாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது  போற்றுதலுக்குரியதாகும். 2010ம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் கோவையில் நடைபெற்ற செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்று, தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து, தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்றவர்.பேராசிரியர் துப்யான்ஸ்கியின் இறப்பு தமிழ் மொழி ஆய்வுத் தளத்தில் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு திமுக தலைவர் என்ற முறையிலும் கலைஞரின் மகன் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேற்கொண்ட பணிகளைத் தொடர்ந்திடச் செய்வதே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Death ,Alexander Dupyansky ,Tamil ,Russian ,MK Stalin , Russian Tamil scholar Alexander Dubansky's death: MK Stalin's condolences
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு