×

ஆன்லைன் சூதாட்ட வழக்கு: நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும்...ஐகோர்ட் கிளை வலியுறுத்தல்

மதுரை: நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரபி என்பவர் உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் இளைஞர்கள்,  மாணவர்கள் ஆன்லைன் சூதாட்டதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்கொலை  செய்து கொள்கின்றனர். இதுவரை 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இந்த விளையாட்டு தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் தடை  செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தடையின்றி ஆன்லைன் சூதாட்டம்  நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த விளையாட்டுக்கு பிரபல விளையாட்டு  வீரர்கள், பிரபல சினிமா நடிகர்கள், நடிகைகள் பயன்படுத்தப்படுகின்றனர். எனவே,  அனைத்து ஆன்லைன் விளையாட்டுகள், ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய  வேண்டும். இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரி இருந்தார்.  இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, விளையாட்டு  வீரர்கள் கங்குலி, விராட் கோலி மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை தமன்னா  உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்,  கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய  முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நோட்டீஸ்  குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். அப்போது,  நீதிபதிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்களை பல லட்சம் இளைஞர்கள்  பின்பற்றுகிறார்கள் என்பதை உணர வேண்டும். அவர்களையை எதிர்காலமாக  கருதுகின்றனர். ஆன்லைன் சூதாட்டதால் 11 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது  வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள  வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை தமன்னா ஆகியோருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப வலியுறுத்திய நீதிபதிகள், ஆன்லைன்  சூதாட்ட வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் வீரா  கதிரவன் நியமனம் செய்து உத்தரவிட்டனர்.  இருப்பினும், வழக்கு குறித்து விளக்கம் அளிக்க எதிர்மனுதாரர்கள் கால அவகாசம் கேட்டதால், விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி வழக்கை டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


Tags : Actors ,Athletes , Online Casino Case: Actors, Athletes Must Walk With Social Responsibility ... iCode Branch Insistence
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி