×

தர்மபுரியில் விவசாய கிணற்றில் விழுந்த குட்டி யானை: 9 மணி நேரத்திற்கும் மேலாக போராடும் வனத்துறையினர்

தர்மபுரி: தர்மபுரியில் விவசாய கிணற்றில் விழுந்த குட்டி யானையை மீட்க 9 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். பாலக்கோடு அருகில் உள்ள ஏரிபஞ்சப்பள்ளி என்ற இடத்தில் வெங்கடாச்சலம் என்ற விவசாயி ஒருவரின் கிணற்றில் இந்த இளம் யானை விழுந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியில் வந்த இந்த யானை இன்று அதிகாலையில் அந்த கிணற்றில் விழுந்துள்ளது.

கிணற்றில் விழுந்த யானையை மீட்க கடந்த 9 மணி நேரத்திற்கும் மேலாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த வனத்துறையினர் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிணற்றில் உள்ள யானைக்கு எவ்வளவு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் யானையை மீட்டால் மட்டுமே தெரியும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சுமார் 2 டன் அளவிற்கு யானையின் எடை இருக்கலாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

தற்போது அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த யானை சேரும் சகதியும் ஈராமாக இருப்பதால் மயக்க ஊசி சரிவர வேலை செய்யாது என கூறுகின்றனர். எனவே கிணற்றில் உள்ள சேற்றை மின் மோட்டார் உதவியுடன் வெளியில் எடுத்துள்ளனர். அந்த யானை மயக்கமடைந்து கீழே விழுவதற்கு மணல் மூட்டைகள் நிரப்பப்பட்டுள்ளது. யானை மயங்கி விழுந்தவுடன் அதனை லாபகமாக மேலே தூக்குவதற்கு கிரேன் தயாராக உள்ளது.

யானை தற்போது வரை மயக்கமடையாமல் கிணற்றினுள் சுற்றிக் கொண்டுள்ளது. காலை தொடங்கி தற்போது வரை யானையை மீட்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் என பலர் ஏரிபஞ்சப்பள்ளி கிராமத்தில் குவிந்துள்ளனர். கிணற்றில் விழுந்த யானையை வேடிக்கை பார்க்க சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் கிணற்றை சுற்றியே இருக்கின்றனர்.

Tags : well ,Foresters ,Dharmapuri , Baby elephant falls into agricultural well in Dharmapuri: Foresters fight for more than 9 hours
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...