×

அரசு ஆம்புலன்ஸ்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: அரசு ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சிலர், நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும் புகார் எழுவதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளுக்காக வான் வழி ஆம்புலன்ஸ் வசதி இருக்கின்றதா? இல்லையெனில் எப்போது ஏற்படுத்தப்படும் என அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் தமிழகத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதிப்படுத்தவும், அனைத்து மாவட்டங்களிலும் பைக் ஆம்புலன்ஸ்கள் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும், ஒவ்வொரு வருவாய் மண்டலத்திற்கும் ஒரு நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும் உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் மனுதாரர் தரப்பில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதிகள் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சிலர், தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்வதாகவும், அதற்காக தனியார் மருத்துவமனைகளிடம் கமிஷன் பெறுவதாகவும் புகார்கள் எழுகின்றன. இவற்றை தவிர்க்க அரசு ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கலாமே என்று கேள்வி எழுப்பினர். ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக சென்று அரசு மருத்துவமனைக்கு உதவி தேவைப்படுவோரை அழைத்து செல்லவேண்டும்.

பல ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றுகின்றார்கள்; அவர்களை பாராட்டுகின்றோம். ஆனால் ஒருசிலர் அவ்வாறின்றி கருப்பு ஆடுகளை போல செயல்பட்டு தனியார் மருத்துவமனைகளோடு தொடர்பு வைத்து அவசர தேவை இருக்கும் நோயாளிகளை அங்கு அழைத்து செல்லும் சூழலும் உள்ளது என தெரிவித்தனர். மேலும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளுக்காக வான் வழி ஆம்புலன்ஸ் வசதி இருக்கின்றதா? இல்லையெனில் எப்போது ஏற்படுத்தப்படும் என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Tags : Government ,ICC , Government Ambulance, GPS, Icord Branch Judges
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...