செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபடும் கும்பல்

ஆலங்காயம்: செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று எஸ்பி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால் ரூ.40 லட்சம் அட்வான்ஸ், ரூ.40 ஆயிரம் வாடகை தருவதாக ஆசைவார்த்தைக்கூறி மோசடி செய்யும் கும்பல்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்று பொதுமக்களின் செல்போன்களுக்கு டிராய் நிறுவனம் குறுஞ்செய்திகள் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இதுதொடர்பாக எஸ்பி விஜயகுமார் கூறியதாவது: செல்போன் டவர் அமைக்க காலி இடம் அல்லது மொட்டை மாடி இருந்தால் ரூ.40 லட்சம் அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும், ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வாடகை செலுத்துவதாகவும் மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவது மற்றும் தொலைபேசி வழியாக அழைப்பு விடுக்கின்றனர். இதை நம்பும் பலர் செல்போன் டவர் அமைக்க இடம் கொடுப்பதாக ஒப்புக்கொள்கின்றனர். அவ்வாறு ஒப்புக்கொள்ளும் நபரிடம் உங்களது வங்கி கணக்கில் ரூ.40 லட்சம் செலுத்துவதற்கு, முன்பணமாக ரூ.1.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் கொடுக்கும் பணம் அட்வான்ஸ் தொகையான ரூ.40 லட்சத்துடன் சேர்ந்து வந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

இதுபோன்ற மோசடி வலையில் விழுபவர்கள் ரூ.1.5 லட்சம் கொடுத்து ஏமாந்து போகின்றனர். மேலும், செல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற வேண்டியது அவசியம். இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ளாமல் எளிதில் பணம் கிடைக்கும் என்று நம்பி சிலர் பணத்தை இழக்கின்றனர். இதுபோன்று குறுஞ்செய்திகள் அல்லது புரோக்கர்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>