×

பறிமுதல் செய்யப்பட்ட பெல்லாரி வெங்காயம் விற்பனைக்கு வந்தது: ரேஷன் கடைகளில் கிலோ ரூ.45

பெரம்பலூர்: பதுக்கி வைத்ததால் பறிமுதல் செய்யப்பட்ட பெல்லாரி வெங்காயத்தை தரம் பிரித்து ரேஷன் கடைகளில் விற்பனைக்கு வந்தது. கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் சில தினங்களுக்கு முன் இரூர் மற்றும் இரூர்- செட்டிக்குளம் சாலையில் கூத்தனூர் பிரிவு ரோடு அருகே சத்திரமனை மற்றும் மங்கூன் ஆகிய 4 இடங்களில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த பெல்லாரி வெங்காயத்தை திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறையினரால் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பறிமுதல் செய்ய கலெக்டர் வெங்கட பிரியா உத்தரவிட்டார். இதைதொடர்ந்து 486 டன் பெல்லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் கைப்பற்றப் பட்ட பெல்லாரி வெங்காயம் கூட்டுறவுத்துறை மூலமாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையத்திடம் (டான்பெட்) ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் 150 பெண், 50 ஆண் பணியாளர்களை கொண்டு 11ம் தேதி முதல் 9,915 பைகளில் உள்ள 486 மெட்ரிக் டன் பெல்லாரியை நேற்று வரை 3,255 பைகள் தரம் பிரிக்கப்பட்டு அதில் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கழிவுபோக 156 மெட்ரிக் டன் பெல்லாரியை தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக அம்மா சிறு பல்பொருள் அங்காடி, அம்மா பசுமை காய்கறி கடைகள் மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பைகளில்இருந்த பெல்லாரியை தரம் பிரிக்கும் பணி தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முதல் பெரம்பலூர் நகர் மற்றும் சுற்றுவட்டார ரேஷன் கடைகளில் கிலோ ரூ.45க்கு இந்த தரம் பிரிக்கப்பட்ட பெல்லாரி வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.80க்கு விற்ற பெல்லாரி தற்போது ரூ.70க்கு விற்கிறது. இதனால் வியாபாரிகளே பெல்லாரியை ஆள்மாற்றி வாங்கி வெளியே திரும்ப கூடுதல் விலைக்கு விற்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க கூட்டுறவுத்துறை முன்வர வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பாண்டித்துரையிடம் கேட்டபோது தெரிவித்ததாவது: நேற்று மட்டுமே 15 டன் பெல்லாரி, ரேஷன் கடைகளில் விற்பனைக்கு வழங்கப்பட்டது. ஒருவருக்கு 2 கிலோ வழங்க அனுமதிக்கப்படும். வியாபாரிகளுக்கு வழங்க கூடாதென விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்படவுள்ளது. 60 சதவீத வெ ங்காயம் மட்டுமே பயன்படும். அவை அனைத்தும் பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்கப்பட்டு விடும் என்றார்.

Tags : Bellary ,ration shops , Ration shop, Bellary onion
× RELATED பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே...