×

நவமலையில் புலி பொம்மை வைத்து குரங்குளை விரட்டும் கிராம மக்கள்

ஆனைமலை: ஆழியார் அருகே உள்ள நவமலை பகுதியில், கடை மற்றும் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கட்டுப்படுத்த புலி பொம்மைகளை வைத்து மக்கள் விரட்டி வருகின்றனர். ஆழியார், நவமலை உள்ளிட்ட மலை அடிவார கிராம மக்கள், மலைப்பகுதிகளுக்குள் வசிக்கும் வீடுகள், கடைகளில் குரங்குகள் சென்று அட்டகாசம் செய்வதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குரங்களால் மிகவும் இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வரும் பகுதிகளில், வனத்துறையினரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றி வருகின்றனர்.

சில நாட்கள் மட்டுமே வனப்பகுதிகளுக்குள் இருக்கும் குரங்குகள் மீண்டும் குடியிருப்புகளுக்குள் வருகின்றன. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் பொதுமக்களும், வனத்துறையினரும் குழப்பத்தில் உள்ள நிலையில், ஆழியார் அருகே உள்ள நவமலை வனக்கிராமத்தில் பொதுமக்கள் புலி பொம்மைகளை வீடு மற்றும் கடை முன்பு வைத்து புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். புலியின் உருவத்தை பார்க்கும் குரங்குகள், உண்மையிலேயே புலி வந்துவிட்டது என நினைத்து அந்த பகுதிக்கு செல்வதில்லை என கூறப்படுகிறது. ஆழியார் வரும் சுற்றுலாப்பயணிகள் பலரும் குரங்குகளுக்கு உணவு அளித்து பழக்க படுத்தி விடுகின்றனர்.

இதனால், குரங்குகள் உணவு சுவைக்கு பழக்கப்பட்டு வனப்பகுதியில் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளாமல் உணவுக்காக குடியிருப்புகளை தேடிவருகின்றன. நவமலை கிராமத்திலும் குரங்குகளின் தொல்லை அதிகமாக இருந்தது.
இதையடுத்து, புலி போன்ற உருவம் வைத்த பொம்மைகளை வீடுகளுக்கு முன்பு வைத்து குரங்குகளை விரட்ட முயற்சி செய்ததாகவும், புலி பொம்மைகளை வைத்த பின் குரங்குகள் தொல்லை வெகுவாக குறைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Navamalai , Tiger, monkey
× RELATED கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை...