நெல்லை ரயில்நிலையத்தில் ரயில் இன்ஜின் மீது ஏறி செல்பி எடுத்த மாணவன்!: உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பரிதாபம்..!!

நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றபோது உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்து  9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை மாவட்டம் சாலையூற்று பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஞானேஸ்வரன். இவர் அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். மகேஷ்குமார் இன்று காலை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ஞானேஸ்வரனை அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து, ரயில் நிலையத்தில் 4வது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் இன்ஜின் மீது ஏறி மாணவர் செல்பி எடுக்க முயற்சித்த்ததாக கூறப்படுகிறது.

அச்சமயம் மின்சார ஒயரில் இருந்து உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாணவர் உடல்கருகி தூக்கி வீசப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்த திருநெல்வேலி ரயில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றினர். நெல்லை ரயில் நிலையமானது மிகுந்த பாதுகாப்புக்குட்பட்ட இடமாக இருந்த போதிலும், மாணவர் எவ்வகையில் ரயில் இன்ஜின் மீது ஏறி செல்பி எடுக்க முயற்சித்தான் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் செல்பி எடுக்கும் நோக்கத்தோடு ரயில் இன்ஜின் மீது ஏறினானா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>