இரண்டு நாள் தொடர்மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

சின்னமனூர்: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூக்கறை பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. எனவே தடுப்பணையில் குளிக்க தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் சின்னமனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் வேம்படிகளம், முத்துலாபுரம் பிரிவு போன்ற பகுதிகளில் மழைநீர் சாலையின் இரு புறங்களிலும்  தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கி நிற்பதால் தெற்கு பகுதி சின்னமனூர் தண்ணீரில் மிதக்கிறது.

மேலும் 4 ஆயிரம் ஏக்கர் வயல்வெளிகளில் முதல்போகம் நடவு செய்து இரண்டரை மாத நெற்பயிராக வளர்ந்து பசுமையாக இருக்கிறது. இரண்டு நாள் தொடர் மழையால் வயலில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதேநிலை தொடர்ந்தால் முதல் போகத்தில்  வளர்த்துள்ள நெல் பயிர்கள் அழுகல் ஏற்பட்டு  பாதிப்பு அடையும் அபாயம் இருக்கிறது. எனவே விவசாயிகள் வயல்களில் தேங்கி நிற்கின்ற மழை நீரை கடத்தி வெளியேற்றி நெற்பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போடி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போடி முந்தல் சாலை கொட்டகுடி ஆற்றுக்குள்இருக்கும் மூக்கறை பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளம் வேகம் எடுத்துள்ளது. எனவே மூக்கறை பிள்ளையார் தடுப்பணை உட்பட ஆற்று பகுதிக்குள் யாரும் உடனடியாக தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் பகுதியில் தொடர்மழை காரணமாக கண்மாய்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சிமலைகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பெரியகுளம் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நல்லகருப்பன்பட்டி, நாரணன்குளம் கண்மாய், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வருகின்றது. கண்மாய் பாசனப்பரப்பு விவசாயிகள் கண்மாய்கள் நிரம்பிவருவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>